ஜி20 விருந்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள ‘அச்சம்’தான் காரணம்: தம்பிதுரை

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: “டெல்லியில் நடந்த ஜி20 விருந்தில் பிரதமர் மோடி உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள ‘அச்சம்’தான் காரணம்” என்று அதிமுக எம்.பி தம்பிதுரை கருத்து தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள எலத்தகிரியில் ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணியை, அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், ராஜ்சபா உறுப்பினருமான தம்பிதுரை இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: ''அமைச்சர் உதயநிதி, பாஜகவை பாம்பு என்றும், அதிமுகவை குப்பை எனவும் விமர்சித்துள்ளார். ஆனால், அதிமுக என்பது கோயில் போன்றது. கோயிலில் வணங்கும் பாம்புதான் பாஜக. பாம்பு என்பது நமது கலாசாரம். இன்றும் கோயில்களில் பாம்புகள் சிலை வைத்து வணங்கப்படுகிறது. திமுக என்பது தற்போது நடைபெறும் குப்பை ஆட்சி. சனாதனம் என்பது திமுகவில்தான் உள்ளது. திமுகவை சேர்ந்த அவரது குடும்பத்தினர் மட்டும் தான் ஆட்சிப் பொறுப்புக்கு வர முடியும். அங்குதான் சனாதனம் நிலவுகிறது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விரைவில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என பேசப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் மாற்றம் குறித்து எதுவும் பேசப்படவில்லை. முதல்வர் ஸ்டாலின் இண்டியா கூட்டணியை ஒருங்கிணைக்கவில்லை. முதலில் நிதீஷ்குமார் இண்டியா கூட்டணியை ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டார். தற்போது ஸ்டாலின் ஒருங்கிணைப்பது போல் செயல்பட்டு வருகிறார். இக்கூட்டணியில் உள்ள பிற தலைவர்கள் ஸ்டாலினை, கைவிட்டு விட்டனர்.

இண்டியா கூட்டணியில் உள்ள பிற தலைவர்கள் டெல்லியில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் கலந்த கொள்ளாத நிலையில், பிரதமர் மோடியின் அழைப்பை பெற்று, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உள்ளார். இதற்கு காரணம், அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சும், தமிழகத்தில் நடைபெறும் சட்டம், ஒழுங்கு சீர்கேடு, கொலை சம்பங்களை மறைக்கவும்தான்.

செந்தில்பாலாஜி செய்த ஊழல்களின் இருந்து தப்பிக்க கொள்ளவும், ஒரே நாடு ஒரே தேர்தல் நிலை வந்தால். திமுக ஆட்சி கலைக்கப்படுமா என்கிற அச்சத்தின் காரணமாக, பிரதமரை, ஸ்டாலின் சந்தித்துள்ளார். இதனால் முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் இருப்பதாக தெரியவில்லை. அவர் தன்னுடைய சுயநலத்திற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்'' என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE