ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபருடன் முதல்வர் சந்திப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: டெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு சந்தித்தார்.

ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு நடப்பாண்டு இந்தியா தலைமையில் நடத்தப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் 2 நாட்கள் மாநாடு நடைபெற்றது.

நேற்று முன்தினம் பகல் நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், இரவு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, உலக நாடுகளின் தலைவர்களுக்கு சிறப்பு விருந்து அளித்தார். இதில் பங்கேற்க, மாநில முதல்வர்கள், முன்னாள் பிரதமர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த விருந்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். குடியரசுத் தலைவர் அளித்த விருந்தில் அவர் பங்கேற்றார்.

விருந்தின்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துவைத்தார். இருவரும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். அப்போது, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர், டெல்லியில் ஓய்வெடுத்த முதல்வர் நேற்று காலை அங்கிருந்து புறப்பட்டு, மதியம் சென்னை வந்தடைந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE