தேர்தல் வந்தால் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் - அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் வந்தால் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

அதிமுக சார்பில் கடந்த ஆக. 20-ம் தேதி மதுரையில் மாநாடு நடைபெற்றது. நாள் முழுவதும் நடைபெற்ற மாநாட்டில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இவ்வளவு பேர் வந்து சென்ற நிலையில், மாநாடு வெற்றி அடைந்ததாகவும், திமுகவினர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மத்தியில் இந்த மாபெரும் மாநாடு கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்பதை பாஜகவுக்கு இம்மாநாடு மூலம் உணர்த்தி இருப்பதாகவும் அதிமுகவினர் பெருமையுடன் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், அம்மாநாட்டை சிறப்பாக நடத்த அமைக்கப்பட்ட 9 மாநாட்டுக் குழுக்கள் மற்றும் அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநாட்டை சிறப்பாக நடத்தியதற்காக பாடுபட்ட அனைத்து குழுவினர்களுக்கும் பழனிசாமி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, மாநாட்டில் பங்கேற்று திரும்பியபோது உடல்நலக்குறைவால் உயிரிழந்த கட்சி தொண்டர்களுக்கு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் மாவட்ட செயலாளர்களுடன் பழனிசாமி தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய பழனிசாமி, “மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. தேர்தல் கூட்டணி தொடர்பாக யாரும் கவலைப்பட வேண்டாம். அதை கட்சி தலைமை நிர்வாகிகள் பார்த்துக்கொள்வார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு நாம் ஆதரவு தெரிவித்திருக்கிறோம்.

ஒருவேளை 2024 மக்களவை தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் நடந்தால், அதை சந்திக்க மாவட்ட செயலாளர்கள் தயாராக இருக்க வேண்டும். அவரவர் மாவட்டங்களில் உடனே தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும். சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் நியமனங்களை ஒரு மாதத்துக்குள் முடித்து, அதன் விவரங்களை கட்சி தலைமையகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். உட்கட்சி பூசல்கள் வளர்ந்தால் அது தேர்தலில் அதிமுகவின் வெற்றியை பாதிக்கும். அதனால் நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இக்கூட்டத்தில், கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE