மக்களை பிரித்தாளும் சூழலை உண்டாக்குகிறது திமுக - பிரேமலதா குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மக்களை பிரித்தாளும் சூழ்நிலையை திமுக உண்டாக்குகிறது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விமர்சித்துள்ளார்.

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், பிரேமலதா அங்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர், பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியது: திமுகவினர் அடுத்த தேர்தலுக்கான அரசியலைத்தான் செய்கிறார்களே தவிர, அடுத்த தலைமுறைக்கான அரசியலை செய்யவில்லை. தேர்தலுக்காக சனாதனம் குறித்து பேசுகின்றனர். இதனால் மக்களுக்கு என்ன பயன்? இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இடையே எந்த பாகுபாடும் பிரிவினையும் கிடையாது. மக்களை பிரித்தாளும் சூழ்நிலையை திமுக உண்டாக்குகிறது. குறிப்பாக உதயநிதி அதை செய்கிறார்.

இளைஞரான உதயநிதியிடம் இளைஞர்கள் நிறைய எதிர்பார்க்கின்றனர். முன்னோக்கிய அரசியலைப் பேச வேண்டிய உதயநிதி, நூறு ஆண்டுகளுக்கு முந்தைய விஷயங்களை பேசுகிறார். இதனால், உதயநிதி மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் குறித்து உரிய நேரத்தில் எங்களின் நிலைப்பாட்டை தெரிவிப்போம். இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றினால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாட்டின் பெயரை மாற்றுவது கண்டிக்கத்தக்கது. விஜயகாந்த் நலமுடன் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE