பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு - பாதுகாப்பு பணிக்கு 5 ஆயிரம் போலீஸார் குவிப்பு

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் இன்று நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் ஆகியோரது தலைமையில் 3 டிஐஜிக்கள், 25 எஸ்பிக்கள், 30 ஏடிஎஸ்பிகள் உள்ளிட்ட 5,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிசிடிவி, ட்ரோன்கள்: பரமக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200 சிசிடிவி கேமராக்கள் மற்றும் அதி நவீன ட்ரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் இன்று பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

தலைவர்கள் இன்று அஞ்சலி: திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி தலைமையில் அமைச்சர்களும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையிலும், ஓபிஎஸ் அணி சார்பில் தர்மர் எம்.பி. தலைமையிலும், அமமுக சார்பில் டிடிவி தினகரன் தலைமையிலும், பாஜக சார்பில் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையிலும், காங்கிரஸ் சார்பில் செல்வப் பெருந்தகை தலைமையிலும் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

முன்னதாக இமானுவேல் சேகரன், மருதுபாண்டியர் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆகியோரது நினைவு தினங்களையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE