முரண்பாட்டின் மொத்த வடிவம் இண்டியா கூட்டணி - ஜி.கே.வாசன் விமர்சனம்

By த.சக்திவேல்

மேட்டூர்: முரண்பாட்டின் மொத்த வடிவமாகவே இண்டியா கூட்டணி உள்ளது. அது கலப்படமான கூட்டணி அசல் கூட்டணி அல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேச்சேரியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வந்திருந்தார். தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தேர்தல் களத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் 20 மாவட்டங்களுக்கு சென்று தொண்டர்களை சந்தித்து தேர்தல் பணிக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என முடுக்கிவிட இருக்கிறேன். ஜி 20 மாநாடு இந்தியாவுக்கு சர்வதேச அளவில் பலத்தை கொடுத்துள்ளது. ஜி 20 மாநாட்டுக்கு பல நாடுகளிலிருந்து சிறப்பு அழைப்பாளர்களை அழைத்திருப்பது இந்தியாவின் ராஜதந்திரம்.

சனாதனம் பற்றி ஒரு பொறுப்புள்ள அமைச்சர் பேசியிருப்பது சாதாரணமாகவும், கொள்கை அடிப்படையில் பேசினார் என்றும் எடுத்துக் கொள்ள முடியாது. பொறுப்புள்ள ஒருவர் பொறுப்பெற்ற முறையில் பேசியது ஏற்றுக்கொள்ள முடிந்தது அல்ல. வாக்களித்த மக்கள் தேர்தல் வரும்போது வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க மாட்டார்கள், தக்க பதிலடி கொடுப்பார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பாதுகாப்புக்கும் அடித்தளம். ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம் என்பது என்பது தமாகாவின் நிலைபாடு.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும். இதைப்பற்றிதான் கவலைப்பட வேண்டுமே தவிர சனாதனம் பற்றி கவலைப்படக்கூடாது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றும் அரசாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் அறிக்கையில் கொடுத்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக தான் செயல்படுகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி வரும்போதெல்லாம் டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீர் பிரச்சினை தலைவலியாக உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு தமிழக விவசாயிகளை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. கூட்டணி, வாக்கு முன்னிலைப்படுத்தி திமுக அரசு முறையாக தண்ணீரை கேட்க தவறி வருகிறது.

தமிழக முதல்வர் நேரடியாக கர்நாடக முதல்வரிடம் பேசி துணை முதல்வரின் பிடிவாதத்தை அடக்க வேண்டும். கூட்டணி அரசியல் மக்களுக்கு நலன் சார்ந்த அரசியலாக இருக்க வேண்டும். ஆனால், இண்டியா பெயரிலான கூட்டணிக்கு அது தெரியவில்லை. முரண்பாட்டின் மொத்த வடிவமாக உள்ள கூட்டணியாகவே உள்ளது. இந்தியா கூட்டணி கலப்படமான கூட்டணி அசல் கூட்டணி அல்ல.

தமிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு ஏழை எளிய மக்களின் சொத்து பரிமாற்றத்துக்கு மறைமுகமாக தடையினை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மின் கட்டணம் கணக்கிடப்படுவது பெரும் புதிராக உள்ளது. விவசாய சங்கங்கள் ஒரே அணியில் நின்று விவசாய நிலங்களுக்கு நன்மை கிடைக்கக்கூடிய வரவேற்று அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் குலோத்துங்கன், மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE