ராதாபுரம் கால்வாயில் நீரின்றி தரிசாகும் விளைநிலங்கள்: 17,000 ஏக்கர் பாசனத்தை அரசு உறுதி செய்யுமா?

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதில், அரசாணை புறக்கணிக்கப்பட்டு வருவதால் பாதிப்பு நீடித்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

தண்ணீர் திறக்கப்படாததால் 52 குளங்களுக்கான 17ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் தரிசாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்து விவசாயிகள் அச்சம் தெரிவிக்கிறார்கள். திருநெல்வேி மாவட்டத்தில் மழை மறைவு பகுதியாக காட்சியளிக்கும் ராதாபுரம் வட்டாரத்தில் வறட்சி தலை விரித்தாடுகிறது.

1970-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைக்கட்டுகளின் கொள்ளளவு 1,300 மில்லியன் கன அடிக்குமேல் தண்ணீர் இருக்கும் பட்சத்தில் உபரி தண்ணீரை ராதாபுரம் கால்வாயில் திறந்து விட வேண்டும். ஆனால் நீண்ட காலமாக இந்த அரசாணையை பின்பற்றுவதில்லை. ஆண்டு தோறும் பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விடுவதில் மெத்தனப் போக்கு இருந்து வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இந்நிலையில் தமிழக அரசு கடந்த ஜூன் 16-ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின்படி இந்த கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தண்ணீரை திறந்து வைத்திருந்தார். வரும் அக்டோபர் 31-ம் தேதி வரை விநாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 138 நாட்கள் ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

இதற்கு கன்னியாகுமரி மாவட்ட அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு போட்டியாக ராதாபுரம் கால்வாயில் ஆண்டு தோறும் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என ராதாபுரம் வட்டார விவசாயிகள் விஸ்வநாதபுரம் விலக்கில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை என்பதால் இந்த வட்டாரம் வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கிறது.

அரசாணையின்படி தற்போது வரையிலும் ராதாபுரம் தாலுகாவில் உள்ள லெவிஞ்சிபுரம், கருங்குளம், பழவூர், அடங்கார் குளம், அழகனேரி, தனக்கர் குளம், கூடங்குளம், பரமேஸ்வர புரம் உள்ளிட்ட 52 குளங்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் இந்த குளங்களுக்குரிய 17ஆயிரம் ஏக்கர் பாசன நிலம் தரிசாக காட்சியளிக்கிறது.

கால்வாயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் போனதால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு சாத்தியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துவிட்டு தங்கள் கடமைமையிலிருந்து ஒதுங்கி விட்டனர். ஆனால் அரசாணையை செயல்படுத்தாததால் ராதாபுரத்தில் விவசாயம் பாழ்பட்டு விட்டது. ராதாபுரம் வட்டாரத்தில் 17 ஆயிரம் ஏக்கர் பாசனம் நடைபெறுவதை அரசு உறுதி செய்யுமா? என்று விவாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE