படைக்குருவிகளால் கம்பு பயிர் பாதிப்பு: அஞ்செட்டி பகுதி விவசாயிகள் வேதனை

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: அஞ்செட்டி பகுதியில் படைக் குருவிகளால் (கூட்டமாக வந்து தாக்க கூடிய பறவைகள்) கம்பு பயிர் சேதம் அடைந்து வருவதால், விவசாயிகள் வேதனை அடைந் துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதி விளை நிலங்கள் பெரும் அளவில் வானம் பார்த்த பூமியாக உள்ளது. இதனால், இப்பகுதி விவசாயிகள் பருவ மழையை அடிப்படையாகக் கொண்டு கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வனத்தை யொட்டியுள்ள விளை நிலங்களில் அடிக்கடி யானை மற்றும் காட்டுப் பன்றிகள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. தற்போது அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், உரிகம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கம்பு பயிர்கள் 5 அடி உயரம் வரை செழித்து வளர்ந்து, கதிர்கள் விட்டு அறுவடைக்குத் தயாராக உள்ளன.

கடந்தாண்டை விட நடப்பாண்டு கம்பு நல்ல மகசூல் கொடுக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ள நிலையில், படைக்குருவிகள் கம்பு கதிர்களைக் கொத்திச் சாப்பிட்டுச் செல்வதால், கதிர்களில் உள்ள கம்பு மணிகள் உதிர்ந்து சேதமடைந்து வருகிறது. இதனால், மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: மலை மற்றும் வனத்தையொட்டி மேட்டு நிலங்களில் மழையை நம்பியே மானாவாரிப் பயிர்களை சாகுபடி செய்கிறோம். கேழ்வரகைப் போன்று கம்பு நன்கு மகசூல் கிடைக்கும். 80 நாட்களில் கம்பு அறுவடை செய்யலாம் என்பதால், பெரும்பாலான விவசாயிகள் கம்பை அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.

யானை, காட்டுப் பன்றிகள் அவ்வப்போது விளை நிலத்தில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. தற்போது, படைக்குருவிகள் தாக்குதலால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் வன விலங்களிடமிருந்து பயிரைக் காக்க காவல் பணியில் ஈடுபடுவதைப் போல, பகல் நேரத்தில் படைக்குருவிகளிடமிருந்து பயிரைக் காக்க காவல் பணியில் ஈடுபட்டு, தகரம் உள்ளிட்ட உலோகங்கள் மூலம் அதிக ஒலிகளை எழுப்பி படைக்குவிகளின் தாக்குதலில் இருந்து பயிர்களை காத்தாலும்,

மீண்டும், மீண்டும் வந்து தாக்குவதால், அதிக அளவில் கதிர்கள் சேதம் அடைந்து மணிகள் உதிர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வன விலங்கு மற்றும் பறவைகளிடமிருந்து பயிர்களைக் காக்க வனத்துறை மற்றும் வேளாண் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE