1000-மாவது குடமுழுக்கு விழா நடத்திய இறை நம்பிக்கையாளர்கள் போற்றும் இணையற்ற ஆட்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: "1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத் துறை. இறை நம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எல்லார்க்கும் எல்லாம்" என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன.

5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு. இன்றைய நாள்,1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத் துறை.

இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்குக் காரணமான இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபுவையும், அதிகாரிகளையும், அலுவலர்களையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்!, என்று முதல்வர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு வருவதோடு, குடமுழுக்குகள் நடைபெறாத திருக்கோயில்களை கண்டறிந்து குடமுழுக்குகளையும் முழுவீச்சில் நடத்தி வருகிறது. அந்த வகையில், சென்னை, மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா இன்று (செப்.10) காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE