தொகுதிக்கு ஒரு மினி விளையாட்டு அரங்கம் - பணிகள் தொடங்கியுள்ளதாக அமைச்சர் உதயநிதி தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தொகுதிக்கு ஒரு மினி விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், துறையின் செயல்பாடுகள், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: முதலமைச்சர் கோப்பை போட்டிமிகப் பெரிய வெற்றியடைந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 3.25 லட்சம் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இவ்வளவு வீரர், வீராங்கனைகளை நம்மால் கையாளக்கூடிய அளவுக்கு விளையாட்டு கட்டமைப்பு உள்ளது என்பதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், பெரும்பாலான மாவட்டங்களில் மாணவர்களுக்கென சிறப்பு விடுதிகள், விளையாட்டு அரங்கங்கள், மைதானங்கள் ஆகியவை உள்ளன. பல்வேறு விளையாட்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள 76 பயிற்றுநர்கள் அனைவரும் வெளிப்படையான முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு மினி விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 10 தொகுதிகளில் எம்எல்ஏக்களின் கோரிக்கையை ஏற்று பணிகள் தொடங்கப்படவுள்ளது.

கேலோ இந்தியா போட்டி: அடுத்த ஆண்டு ஜனவரியில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை நடத்த உள்ளோம். இதற்காக 36 மையங்கள் தொடங்கப்படவுள்ளன. தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம்.

ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள், தங்கள் பிள்ளைகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையவிடுதிகளை நம்பி அனுப்புகிறார்கள். அவர்களுடைய நம்பிக்கைக்கு உகந்த வகையில் மிகச்சிறந்த உலகத்தரம் வாய்ந்த வீரர், வீராங்கனைகளாக உருவாக்குவது நம்முடைய துறையின் கடமையாகும்.

தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வீரர், வீராங்கனைகளின் தேர்வுகள் நேர்மையான முறையில் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும். வீரர், வீராங்கனைகளின் பாதுகாப்பு மிகவும் அவசியம். அதில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE