முக்கிய வழக்குகளில் ஆடியோ - வீடியோ முறையில் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும்: ஐகோர்ட்

By கி.மகாராஜன் 


மதுரை: முக்கிய வழக்குகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 161 பிரிவில் பெறப்படும் வாக்குமூலங்கள் ஆடியோ - வீடியே முறையில் பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி அதிலாபானு. இவர்களின் மகன் முகமது அஸ்லம் (7), மகள் அஜிராபானு (5). ரோஸ்லின் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முத்துசாமி முக்கிய சாட்சியாக இருந்துள்ளார். அவர் நீதிமன்றத்தில் பிறழ்சாட்சியளித்தால் ரோஸ்லின் கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலையாகியுள்ளனர். அதன் பிறகு முத்துசாமி சிங்கப்பூர் சென்றுவிட்டுள்ளார். சிங்கப்பூரில் அவருக்கும் ரோஸ்லின் உறவினர் சாகுலுக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. இதில் முத்துசாமியின் கை விரலை சாகுல் உடைத்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து கேள்விபட்டதும் அதிலாபானு சாகுலை கடுமையாக பேசியுள்ளார்.

இந்நிலையில், 8.11.2010-ல் அதிலாபானு மகன், மகளுடன் கடத்தப்பட்டார். பின்னர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அதிலாபானு மற்றும் அவரது மகன், மகளின் சடலம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. மூவரும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக கேணிக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட 13 பேரையும் விடுதலை செய்து 2019-ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து அனைவருக்கும் தண்டனை வழங்கக்கோரி அதிலாபானு உறவினர்கள் சார்பிலும், சிபிசிஐடி தரப்பிலும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில், அனைத்து சாட்சிகளும் பிறழ்சாட்சியாக மாறியுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரர் கூட விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அந்தளவுக்கு சாட்சிகள் மிரட்டப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வெளியே உள்ள நீதிமன்றத்தில் தாய், மகன், மகள் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: குற்றவியல் நடைமுறைச் சட்டம் 161 மற்றும் 164 பிரிவின் கீழ் சாட்சிகள் வாக்குமூலத்தை ஆடியோ- விடியோ எலெக்ட்ரானிக் முறையில் பதிவு செய்ய வேண்டும் என குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. திருத்தம் மேற்கொள்ளப்பட்டு 14 ஆண்டுளாகியும் இந்த முறையை விசாரணை அதிகாரிகள் அமல்படுத்தாமல் உள்ளனர். இதை உள்துறை செயலாளரும், டிஜிபியும் கண்காணிக்காமல் உள்ளனர்.

குற்ற வழக்குகளில் குற்றவாளிகளின் பங்கு சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட வேண்டும். அதற்கு உரிய ஆதாரங்கள், ஆவணங்கள் இருக்க வேண்டும். தற்போது 161 வாக்குமூலம் முறையாக பதிவு செய்யப்படுவதில்லை. வாக்குமூலத்தை சரிபார்க்க சாட்சிகளுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை. சாட்சிகளை குற்றவாளிகள் போல் நடத்துகின்றனர். இதனால் ஏற்கெனவே குற்றவாளிகள் தரப்பில் மிரட்டலை சந்திக்கும் சாட்சிகளிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியாது.

இதனால் ஆடியோ வீடியே முறையில் வாக்குமூலத்தை பதிவு செய்யும்போது பிறழ்சாட்சியம் தடுக்கப்படும். இதனால் முக்கிய வழக்குகளில் 161 வாக்குமூலங்களை ஆடியோ- வீடியோ முறையில் பதிவு செய்ய வேண்டும் என உள்துறை செயலாளருக்கும், டிஜிபிக்கும் உத்தரவிடப்படுகிறது. இந்த முறையில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் மற்றும் சூழ்நிலை சாட்சிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக உள்துறை செயலாளரும், டிஜிபியும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த முறை அமல்படுத்தப்பட்டதை கண்காணிக்க உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும்.

இந்த வழக்கில் கொலையான பெண்ணின் கணவர் மற்றொரு வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்து, அவர் பிறழ்சாட்சியம் அளித்தால் அந்த வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்கள், பெண்ணின் கணவர் சிங்கப்பூரில் தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள், ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. இதனால் மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்