“உதயநிதியின் சனாதனப் பேச்சை பாஜக அரசியலாக்க நினைப்பது எடுபடாது” - நாராயணசாமி கருத்து

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “உதயநிதியின் சனாதனப் பேச்சை பெரிதுபடுத்தி பாஜக அரசியலாக்க நினைப்பது மக்களிடம் எடுபடாது. இண்டியா கூட்டணிக்கும் பாதிப்பு ஏற்படாது” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. மாநிலத்தில் அரிதி பெரும்பான்மை இன்றி ஜனாதிபதி ஆட்சி அமலானால் இந்த முறை எப்படி சாத்தியமாகும்? ஒரு சில மாநிலத்தில் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகளே ஆகிறது. அந்த மாநிலங்களின் நிலை என்ன? அவர்களுக்கும் தேர்தல் நடத்தப்போகிறார்களா? இந்தத் தேர்தல் முறை இந்திய ஜனநாயகத்துக்கு ஒத்து வராது. மாநிலங்களில் பல கட்டமாக தேர்தல் நடைபெறும். நாடாளுமன்றத் தேர்தலோடு அனைத்து மாநில தேர்தல் நடத்துவது சாத்தியமாகாது. இது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் வேலையாகும்.

பாஜக 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களைத் தள்ளி வைக்கும் நோக்கோடு, இந்த தேர்தல் நாடகத்தை ஆடுகிறது. இதற்கு காரணம் 5 மாநில தேர்தலிலும் பாஜக படுதோல்வி அடையும். அதன்பின் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்பதால் இந்த யுக்தியை கடைபிடிக்கின்றனர். இண்டியா கூட்டணி மத்திய அரசின் இத்திட்டத்தை முழுமையாக எதிர்க்கிறது.

காங்கிரஸோடு, மற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படாது என பாஜக நினைத்தது. ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது இண்டியா என்ற பெயரே பிரதமருக்கு பயத்தை உருவாக்கியுள்ளது. அதை மாற்றி பாரத் என சொல்கின்றனர். இந்தியா என்றாலும், பாரத் என்றாலும் ஒன்றுதான். அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியா என்ற பாரத் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா என்ற பெயரை முழுமையாக எடுத்துவிட முடியாது. இந்தியா என்றும், பாரத் என்றும் நாட்டை அழைக்கலாம். பாஜக தோல்வி பயத்தில் இந்தியா பெயரை எடுத்துவிட முயற்சிக்கின்றனர். இதை நாட்டு மக்கள் பார்த்து வருகின்றனர்.

அமைச்சர் உதயநிதி சனாதன தர்மம் பற்றி பேசினார். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனித்தனி கொள்கை உண்டு. பல மதங்களுக்கு கோட்பாடு உண்டு. திமுகவின் கொள்கை சனாதனத்தை எதிர்ப்பது. அதை வலியுறுத்தி அமைச்சர் பேசியுள்ளார். உதயநிதியின் சனாதானப் பேச்சை பெரிதுபடுத்தி பாஜக அரசியலாக்க நினைப்பது மக்களிடம் எடுபடாது. இண்டியா கூட்டணிக்கும் பாதிப்பு ஏற்படாது.

ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கை இருக்கும். கூட்டணி சேரும்போது குறுகிய செயல்திட்டத்தை உருவாக்கி நாங்கள் செயல்படுவோம். காங்கிரஸை பொறுத்தவரை மதம் வேறு, அரசியல் வேறு. இரண்டையும் கலக்கக்கூடாது. ஜி20 மாநாடு டெல்லியில் கூடியுள்ளனர். இது நாட்டுக்கு பெருமை தேடித்தரும். மாநில முதல்வர், மத்திய அமைச்சர்கள், ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் பங்கேற்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதற்கான காரணத்தையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை. நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் என்ற முறையில் அவரை அழைக்காதது பாஜகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது.

புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சிக்கு வந்தபின் பேனர் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அரசின் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்படுகிறது. புதுவையில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ளது. இதை அமல்படுத்த வேண்டிய ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே பேனர் தடை சட்டத்தை அமல்படுத்த தீர்ப்புள்ளது. மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவு புதுவையில் காற்றில் பறக்கிறது.

பேனர்களால் விபத்துகள் ஏற்பட்டுள்ளது. ரவுண்டானாவில் பேனரால் ரத்னா நகர் நடராஜன் பைக்கில் சென்றபோது எதிரே வந்த கண்ய்டனர் லாரி மீது மோதி இறந்தார். வில்லியனூரிலிருந்து கூடப்பாக்கம் செல்லும் வழியில் முருகன் என்பவர் பேனரால் லாரி மோதி இறந்தார். இந்த 2 உயிர் பலிக்கு முதல்வர், அமைச்சர் நமச்சிவாயம் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு பொறுப்பேற்று முதல்வர், அமைச்சர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.

நைனார் மண்டபத்தில் பேனரை கிழித்தார்கள் என 2 சிறுவர்கள் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர். பேனரை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எந்த அரசியல்கட்சியாக இருந்தாலும் பேனர் வைப்பது தவறு. பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட, அனுமதியளித்த இடங்களை தவிர மற்ற இடங்களில் யார் பேனர் வைத்தாலும் அகற்றப்பட வேண்டும்.

மாவட்ட ஆட்சியர், நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் மீது உள்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE