தி.மலை அறிவொளி பூங்கா முதல் ரவுன்டானா வரை ஆட்டோக்களை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து பாதிப்பு

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் அறிவொளி பூங்கா முதல் ரவுன்டானா வரை ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதால் பொதுமக்களும், பக்தர்களும் மற்றும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கி வருகிறது. மேலும், ‘மலையே மகேசன்' என மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலையை வணங்குகின்றனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உட்பட பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து இறைவனை வழிபடுகின்றனர்.

இதனால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதி உட்பட பிரதான வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில், திருவண்ணாமலை பேருந்து நிலையம் முன்பு உள்ள போளூர் சாலை, நகர போக்குவரத்தின் இதய துடிப்பாகும். போளூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், வடக்கு மற்றும் தெற்கு பகுதியின் இணைப்பு என்பது துண்டிக்கப்படும். கடலூர் - சித்தூர் புறவழிச்சாலை வழியாக சுமார் 5 கி.மீ., தொலைவு சுற்றிக்கொண்டு தான் வர வேண்டும்.

திருவண்ணாமலை நகர போக்குவரத்தின் முதுகெலும்பு பகுதியாக உள்ள பேருந்து நிலையம் முன்பு உள்ள போளூர் சாலையில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதிப்பு தொடரும். இதற்கு, பிரதான காரணமாக ஆட்டோக்கள் உள்ளன. பேருந்து நிலைய பகுதியில் இருந்து மட்டும் சுமார் 75 ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், பிற இடங்களில் இருந்து வரும் ஆட்டோக்கள் பேருந்து நிலையத்தின் உள்ளே சென்று பயணிகளை ஏற்றியும், இறக்கியும் செல்கின்றன.

ஆட்டோக்கள் எண்ணிக்கை மிக அதிகளவு உள்ளதால், அறிவொளி பூங்கா முதல் ரவுன்டானா வரை ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. பயணிகளின் வருகைக்காக 15 ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், வேலூர், ஆரணி, அவலூர்பேட்டை மற்றும் பெங்களூரு மார்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும், பேருந்து நிலையம் உள்ளே எளிதாக நுழைய முடியவில்லை.

இதேபோல், சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் மார்க்கங்களில் இருந்து வரும் பேருந்துகளும் நுழைய முடியாது. மேலும், பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் பேருந்துகள் திணறுகின்றன.

ஆட்டோக்களை நிறுத்தி வைப்பதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, நடந்து செல்லும் பொதுமக்களும், கிரிவலம் செல்லும் பக்தர்களும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், ஆட்டோக்களும் வேகமாகவும், தாறுமாறாகவும் இயக்கப்படுகின்றன. நடந்து செல்பவர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை இடைமறித்து, சாலையில் ஆட்டோக்களை நிறுத்துவதை ஓட்டுநர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இவர்களது செயலால், அனைத்துதரப்பினரும் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். ஆட்டோக்களை நிறுத்தி வைப்பதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டும், சாலையில் மற்றும் நடைபாதையில் ஆட்டோக்களை நிறுத்தி வைப்பதால் பொதுமக்களும், பக்தர்களும் அவதிப்படுகின்றனர்.

ஆட்டோக்கள் நிறுத்தப்படும் சாலையில், பேருந்து நிலையம் முன்பு (நுழைவு வாயில் அருகே) போக்குவரத்து காவல்துறை அதிகாரி மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுகின்றனர். ஆனால் அவர்கள், ஆட்டோக்களை ஒழுங்குப்படுத்துவதில்லை. ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது என எச்சரிப்பதும் கிடையாது. காவல் துறை அதிகாரிகள், ஆட்சியர் மற்றும் அமைச்சர் உள்ளிட்ட விஐபிக்கள் செல்லும்போது மட்டும், போளூர் சாலையில் ஆட்டோக்கள் நிறுத்த அனுமதிப்பது கிடையாது.

அவர்களிடம், நற்பெயர் பெறுவதில் மட்டும் கவனம் செலுத்துபவர்கள், சாமானிய மக்களின் துயரங்களை பொருட்படுத்துவதில்லை. இனி வரும் காலங்களில் அறிவொளி பூங்கா முதல் ரவுன்டானா வரை சாலையில் ஆட்டோக்களை நிறுத்தி வைக்க காவல் துறை அனுமதிக்கக்கூடாது, ஆட்டோக்களை நிறுத்தி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE