பருத்தி விவசாயிகளைச் சுற்றும் பேராபத்து!

By அ.சாதிக் பாட்சா

பெரம்பலூரில், பருத்தியைத் தாக்கும் பூச்சிக்கு அடித்த பூச்சிக்கொல்லி மருந்தின் வீரியம் நான்கு மனித உயிர்களையும் காவு வாங்கியிருக்கிறது. இந்த மருந்துகளைப் பருத்தி வயலுக்குப் பயன்படுத்திய இன்னும் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டுக் கிடக்கிறார்கள்.

பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி மாவட்டங்களில் பருத்தி அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கடந்த ஆண்டு சரியான மழைப் பொழிவு இல்லாமல் மகசூல் குறைந்து போனது. அதனால், இந்த ஆண்டு கூடுதல் மகசூல் எடுக்க ஆசைப்பட்ட பெரம்பலூர் பகுதி பருத்தி விவசாயிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளை விதைத்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே, நான்கு அடியில் வளர வேண்டிய பருத்திச் செடிகள் ஆறு அடிக்கு வளர்ந்தன. அதேசமயம், ஊட்டமாக வளர்ந்த இந்தப் பயிர்களில் விதவிதமான பூச்சிகளும் வந்து விழுந்து மகசூலை நாசம் செய்தன.

மரபணு பருத்தியால் வந்த வினை

இதனால், இந்த ஆண்டும் நட்டம் ஏற்பட்டுவிடுமோ எனப் பயந்த விவசாயிகள், தங்கள் இஷ்டத்துக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி பயன்படுத்தினர். பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்கள் சிலரும் வீரியமிக்க பூச்சிக்கொல்லி மருந்துகளை இவர்களின் தலையில் கட்டி காசு பார்த்தனர். விளைவு, இந்த மருந்துகளை உரிய பாதுகாப்பின்றி பயன்படுத்திய விவசாயிகளில் செல்வம், ராஜா, அர்ச்சுணன், ராமலிங்கம் ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப் போக்கு, உடல் அரிப்பு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ‘பாமரர் ஆட்சியியல் கூடம்’ என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரவணன், “மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியை பூச்சிகள் அதிகம் தாக்குகின்றன. நாட்டுப் பருத்தியில் இவ்வளவு தாக்குதல் இல்லை. எனவே, மரபணு பருத்தி பயிரிடுவைதை தடைசெய்ய வேண்டும். மூன்றுக்கு ஒன்று இலவசம் எனச் சொல்லி, தேவையற்ற பூச்சிக்கொல்லி மருந்துப் புட்டிகளை விவசாயிகளின் தலையில் கட்டி காசுபார்க்கிறார்கள் சில பூச்சிமருந்து வியாபாரிகள். இதனால், பல விஷங்கள் ஒன்று சேர்ந்து விவசாயிகளையும் கால்நடைகளையும் பாதிக்கிறது. இதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

விழித்துக் கொண்டமஹாராஷ்டிரா

சூழலியல் செயல்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, “மகாராஷ்டிராவில் இதேபோல் பூச்சிக்கொல்லி மருந்து அடித்தபோது அதன் விஷத்தன்மை தாக்கி பலர் இறந்தனர். அம்மாநில அரசு சுதாரித்துக் கொண்டு, பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை நிலையங்கள் பலவற்றை பூட்டி சீல் வைத்துள்ளது. மருந்துகளின் தரம், ரசாயனச் சேர்க்கையின் அளவு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் பகுதியிலும் அதேபோல் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசும் வேளாண் துறையும் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறதே” என்றார் காட்டமாக.

அவரே தொடர்ந்து, “கோடிக்கணக்கான ரூபாய் புரளும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையை கட்டுப்படுத்த அரசு விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும். வேளாண்மைத் துறையினரின் பரிந்துரை இல்லாமல் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். மீறி விற்றால், அந்த நிறுவனங்களை மூடி சீல்வைக்க வேண்டும். அதேபோல், உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தத் தவறும் விவசாயிகள் மீது, ஆபத்தான பொருட்களை அஜாக்கிரதையாக கையாளுதல் எனும் சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டிக்கலாம்” என்றார்.

நிவாரணம் தேவை

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம் நம்மோடு பேசுகையில், “ஆபத்து என்று தெரிந்தும் விவசாயிகள் இந்தப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகிறார்கள் என் றால் அதற்குக் காரணம் அவர்களை வாட்டும் வறுமை. எனவே, இந்தச் சம்பவங்களில் பரிதாபமாக உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தேவையான நிவாரண உதவிகளை உடன் வழங்குவதுடன், இனிமேல் இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் இருக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் சுதர்சனிடம் கேட்டபோது, “பூச்சிக்கொல்லி பூச்சிகளுக்கு மட்டுமல்ல.. மனிதன் உள்பட அனைத்து உயிரினங்களுக்குமே விஷம்தான். எனவே, தகுந்த காலுறை, கையுறை, முகமூடி, பாலித்தீன் உடை இவற்றை அணிந்து கொண்டு, பூச்சிக்கொல்லிகளை கைத் தெளிப்பானி்ல் மட்டுமே தெளிக்க வேண்டும்.

காற்றின் திசைக்கு எதிர் திசையில் மருந்தைத் தெளிக்கக் கூடாது. மருந்தை கீழ் நோக்கி மட்டுமே ஸ்பிரே செய்யவேண்டும். முகத்துக்கு நேராகவோ, தலைக்கு மேலோ மருந்தை ஸ்பிரே செய்யக்கூடாது. ஒரு நாளைக்கு 10 கேன் அளவு மட்டுமே மருந்து தெளிக்க வேண்டும். ஒரு பூச்சிக்கொல்லி மருந்துடன் இன்னொரு மருந்தை கலந்து அடித்தால் அதன் விஷத்தன்மை பன்மடங்கு அதிகரித்து ஆபத்தை உண்டாக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

நடவடிக்கை எடுக்க முடியாது

பூச்சிக்கொல்லி மருந்துகளை பாதுகாப்பாக கையாள்வது தொடர்பாக சமீபத்தில் நூறு பேருக்கு பயிற்சியளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். அவர்களுக்கு பாதுகாப்பு உடை உள்ளிட்ட உபகரணங்களையும் இலவசமாக வழங்கினோம்.

தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை என்பதால் பூச்சிக்கொல்லி விற்பனை நிலையங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது” என்றார்.

விவசாயிகளின் உயிரைப் பறிக்கும் இந்தப் பிரச்சினைக்கு இதுதான் தீர்வா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

22 hours ago

மேலும்