வருமானம் இல்லாமல் குடும்பமே திண்டாடுகிறது: தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு இல்லை - உடுமலை கவுசல்யாவின் சகோதரர் விரக்தி

By பி.டி.ரவிச்சந்திரன்

 

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் எனது தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என அவரது மகன் கவுதம் விரக்தியுடன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் குப்பம்பாளையம். திருப்பூர் மாவட்டத்தின் எல்லை அருகே உள்ள சிறிய ஊர். பெரும்பாலோர் ஏழை விவசாயிகள். தங்கள் குழந்தைகளை அதிகம் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் கிராமத்தில் அனைத்து குடும்பங்களிலும் உள்ளதால், இந்தப் பகுதியில் இருந்து சிலர் பழநிக்கும், சிலர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைக்கும் மேல்படிப்புக்கு குழந்தைகளை அனுப்புகின்றனர். பஸ் போக்குவரத்து அடிக்கடி இல்லாத கிராமம். பக்கத்தில் உள்ள பாப்பம்பட்டிதான் சற்று பெரிய ஊர். கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கிராமத்தில்தான் குடும்பத்தோடு வசித்துள்ளார்.

கவுசல்யாவின் பள்ளிப் படிப்பும் இந்த கிராமத்தில்தான். பின்னர் தொழில் காரணமாக பழநி திருநகர் பகுதிக்கு குடியிருப்பை மாற்றியுள் ளனர்.

உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகு, குப்பம்பாளையம் கிராம மக்கள், உறவினர்கள், நண்பர்கள் சின்னசாமியின் குடும்பத்தைப் பற்றிதான் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

தற்போது உள்ள சூழ்நிலை குறித்து அறிந்துவர குப்பம்பாளையம் சென்றபோது, முதலில் யாரும் வாயைத் திறக்கவில்லை. பின்னர், ஊரில் மளிகைக் கடை வைத்துள்ள சின்னசாமியின் நண்பர் ஜெயமுருகன்தான் சுற்றும்முற்றும் பார்த்தபடி பேச ஆரம்பித்தார். அவர் கூறியதாவது:

சகஜமாக பழகுபவர்

சின்னசாமி பழக்க வழக்கத்துக்கு நல்லவர். பிறருக்கு உதவும் குணமுடையவர். நான் காலில் அடிபட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியபோது, அவரது காரில் அழைத்துவந்து இறக்கிவிட்டார். வாடகைப் பணம்கூட வாங்கவில்லை. குப்பம்பாளையத்தை விட்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பழநிக்கு குடும்பத்தை மாற்றிவிட்டார். அவ்வப்போது அவரது தாய், தந்தை, அவரது மனைவியின் குடும்பத்தினரைப் பார்க்க கிராமத்துக்கு வந்து செல்வார். ஊருக்கு வரும்போது மளிகைக் கடையில் சிறிது நேரம் பேசிவிட்டுதான் செல்வார். ஊரில் உள்ள அனைவரிடமும் சகஜமாகப் பழகுவார். அதிர்ந்து பேசாதவர். இதுபோன்ற செயலில் ஈடுபட்டார் என்பதை இன்னும் நம்ப முடியவில்லை. தீர்ப்பு குறித்து கருத்து சொல்வது நன்றாக இருக்காது என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

படிக்க அனுப்பியதே தாய்தான்

கவுசல்யாவின் தாத்தா ஜெயராமன் கூறியதாவது:

கவுசல்யா மீது அவரது தம்பியை விட அதிகம் பாசம் காட்டினார் எனது மகள் அன்னலட்சுமி. மருமகன் சின்னசாமி, மகளிடம், ‘படித்தது போதும். பெண் கேட்டு வருகிறார்கள். திருமணம் முடித்துவிடலாம்’ என்று சொன்னபோதும்கூட, மகள் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று கூறி, கல்லூரிக்கு அனுப்பியவர் அன்னலட்சுமிதான். இன்று தாயாரின் விடுதலையை எதிர்த்து, மேல் முறையீடு செய்வேன் என கவுசல்யா கூறுகிறார். ஏற்கெனவே தந்தையை தூக்குத் தண்டனைக்கு அனுப்பியது போதாது என்று தாய்க்கும் தண்டனை வாங்கித் தருவதில் ஆர்வமாக உள்ளார்.

என் பேத்தி, எப்படி இந்த நிலைக்கு மாறினார் என இதுவரை புரியவில்லை. எங்கள் குடும்பம் பற்றி ஊரில் உள்ளவர்களிடம் கேட்டுப் பாருங்கள். யாருக்கும் சிறு தீங்குகூட செய்யாத தாய், தந்தையா இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பார்கள்? என்கிறார் தனது மகள், மருமகன் மீது உள்ள நம்பிக்கையில்.

கவுசல்யாவின் தம்பி கவுதம் பேசியபோது, மனமுடைந்த குரலில், ‘‘சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எனது தாயை தேற்ற வேண்டும். ‘யாரோ பண்ணிய செயலுக்கு, நமக்கு ஏன் தண்டனை கொடுக்கிறார்கள்; நியாயம் கிடைக்காமலா போய்விடும்?’ என்று அம்மா கேட்கிறார். அக்கா கவுசல்யா, வேறொரு மனநிலையில் இருக்கிறார்.

வீட்டில் அனைவரும் அவர் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தோம். எப்படி இப்படி மாறினார் என்பதுதான் தெரியவில்லை.

மேல் முறையீடு இல்லை

தந்தைக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, மேல்முறையீடு செய்யகூட எங்களுக்கு பண வசதி இல்லை. தந்தை சிறைக்குச் சென்றதால் கட்டணம் செலுத்த முடியாமல், எனது படிப்பை பாதியில் நிறுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது. எங்கள் குடும்பமே தந்தையின் வருவாயை நம்பித்தான் இருந்தது. அவர் சிறையில் இருந்ததால், ஓராண்டுக்கும் மேலாக எந்த வருமானமும் எங்களுக்கு இல்லை.

சாப்பாட்டுக்கே வசதி இல்லாமல் திண்டாடுகிறோம். இந்த நிலையில் பணமின்றி தூக்குத் தண்டனையை எதிர்த்து எப்படி மேல்முறையீடு செய்ய முடியும். இனி நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட வேண்டிய நிலையில்தான் நானும், அம்மாவும் உள்ளோம் என்றார்.

குப்பம்பாளையம் கிராம மக்கள் பலரும் இன்னமும் கவுசல்யாவின் சிறுவயது நினைவுகளையும், தற்போதைய நிலையையும், சின்னசாமியின் குடும்பத்தையும் பற்றிதான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்