சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: எஸ்.ஐ ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி 

By கி.மகாராஜன் 


மதுரை: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமீன் மனு 5வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ். இருவரும் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020-ல் கரோனா ஊரடங்கு நிபந்தனையை மீறி செல்போன் கடையை திறந்து வைத்திருந்தது தொடர்பாக போலீஸார் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

காவல் நிலையத்தில் வைத்து தந்தை, மகனை போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகியோரை கொலை வழக்கில் சிபிஐ போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கைதான 9 பேரும் கைதான நாளில் இருந்து மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இவர்கள் ஜாமீன் கோரி மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடியானது.

இந்நிலையில் சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், 3 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். தந்தை, மகன் இறப்புக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. சிறையில் உடல் நலக்குறைவால் சிரமப்பட்டு வருகிறேன். எனவே ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிஐ வழக்கறிஞர் வாதிடுகையில், மதுரை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த சூழலில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும். சாட்சிகளை கலைக்கவும், தடயங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என்றார். ரகுகணேஷூக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து ரகுகணேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். சார்பு ஆய்வாளர் ரகுகணேஷின் ஜாமீன் மனு தள்ளுபடியாவது இது 5வது முறையாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE