புதுச்சேரி: புதுச்சேரியில் பேனர் தடைச்சட்டம் இருந்தும், முதல்வர் பிறந்த நாளைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் நகரெங்கும் பேனர்கள் வைத்துள்ளனர். குறிப்பாக சிக்னல்கள், முக்கிய ரவுண்டானாக்களில் வாகனங்கள் செல்லஇயலாத வகையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகனங்களில் செல்வோர் தட்டுத்தடுமாறி செல்லும் நிலை ஏற்படுகிறது.
பேனரால் வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடவடிக்கை எடுக்காத ஆட்சியர் மீது டிஜிபியிடம் புகாரும் தரப்பட்டுள்ளது. தமிழகமும், புதுச்சேரியும் நிலவியல் அடிப்படையில் ஒன்றோடு ஒன்று கலந்த பகுதிகளே. தமிழகம் போலவே புதுச்சேரியில் பல விஷயங்கள் இருந்தாலும், இரு மாநிலங்களையும் பிரித்து காட்டுவது தற்போதைய நிலையில் பேனர்கள்தான். புதுச்சேரியில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன பேனர்கள்.
பொது இடங்களில் அனுமதியின்றி கட்-அவுட், பிளெக்ஸ் பேனர் வைக்கவும், சுவரொட்டி ஒட்டுவதற்கும் புதுச்சேரி மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளிடம் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய அனுமதி பெற்றாலும், குறிப்பிட்ட இடங்களில், அதுவும் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே வைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதே இல்லை.
சென்னை உயர்நீதிமன்றமும் பல்வேறு வழிகாட்டு முறைகளை பின்பற்றிதான் பேனர்கள் வைக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ஆனால், அதை கண்டுகொள்வதில்லை. விதிமுறைகளைப் பின்பற்றாமல் வைக்கப்படும் பேனர்களால் அந்தச் சாலை வழியாக வாகனங்களில் செல்வோரின் கவனம் திசை திரும்பி, விபத்து அபாயத்துக்கு வழி வகுக்கிறது.
» நடிகர் மாரிமுத்து மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்
» “சாதி/மதத்தை பார்த்து ஓட்டு போடாதீர்கள்” - விவாதத்தை கிளப்பிய ‘ஜவான்’ கிளைமாக்ஸ் வசனம்
கடந்த மாதம் முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாள் பேனர்களால் சாலைகளில் அதிகளவில் நெரிசல் ஏற்பட்டது. முதல்வரின் வீட்டருகே சாலையில் வைத்த வளைவு விழுந்து, 3 பேர் காயமடைந்த சம்பவமும் நடந்தது.
தற்போது அவரது மருமகனும், உள்துறைஅமைச்சருமான நமச்சிவாயம் பிறந்தநாளையொட்டி நகரெங்கும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆட்டோவில் குழந்தைகள் சென்றபோது விபத்துக்குள்ளான புஸ்ஸி வீதியில், தற்போது வைக்கப் பட்டிருக்கும் பேனர்களால்அதிக நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலையில் கட்டைகளை வைத்து அடைத்துள்ளனர்.
இந்திராகாந்தி ரவுண்டானா, ராஜீவ்காந்தி ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய ரவுண்டானாக்களில் வாகனங்கள் செல்வதை காண முடியாத வகையில் பேனர்கள் உள்ளன. ஒரு படி மேலே சென்று காமராஜர் சிலை அருகே நேருவீதி நுழைவு பகுதியில் சாலையை அடைத்து பெரிய ஸ்கீரின் வைத்து ஸ்பீக்கர் வைத்துள்ளனர்.
புதுச்சேரியில் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள் கூறுகையில், "முக்கிய சாலை சந்திப்புகளில் வைக்கப்படும் பேனர்களில் உள்ள கம்புகள் நீட்டியப்படி இருப்பதால் பாதிக்கப்படுவது நாங்கள்தான். நாங்கள் குழந்தைகளை பள்ளிக்கு விட்டு, அழைத்து வர செல்லும்போது பேனர் கட்டைகளில் பலமுறை இடித்து பாதிக்கப்படுகிறோம்." என்கின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "போக்கு வரத்து அதிகமுள்ள புதுச்சேரி- கடலூர் சாலை, மறைமலையடிகள் சாலை, அண்ணா சாலை, புஸ்சி வீதி, முத்தியால்பேட்டை, ராஜீவ் காந்திசதுக்கம், இந்திரா காந்தி சதுக்கம், வில்லியனூர் சாலை ஆகிய பகுதிகளில் பேனர்கள் இருப்பதும் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம்.
குழந்தைகள் அதிகளவில் பயிற்சிக்கு வரும் பால்பவன் வெளியே சாய்ந்தபடி விழும் சூழலில் மெகா பேனர் தொங்குகிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் இதுபோல் வைக்கப்படும் பிரமாண்ட பேனர்களால் விபத்து அபாயம் ஏற்படுவதுடன், சில இடங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கும் வழி வகுக்கிறது. இதனால் நகரின் அழகும் சீர்குலைகிறது.
அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்தநாள், கட்சி மாநாடு, கூட்டம் எதுவானாலும் பேனர்கள் வைப்பதில் போட்டா போட்டி போடுகின்றனர் ஆட்சியர் இதில் உறுதியான நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருந்தும் அதைச் செய்வதில்லை. பேனர், போஸ்டர்களை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு, இதற்கான தடுப்புச் சட்டம் கொண்டு வந்துள்ளது. அதாவது, நகரில் அழகினை கெடுக்கும் தடுப்புச் சட்டம் 2000-ன் கீழ் பிளெக்ஸ் பேனர் வைப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முடியும்.
இந்த சட்டப்பிரிவு 6-ன்படி அனுமதியின்றி பேனர் வைப்பவர்களுக்கு 3 மாத சிறை தண்டனை, ரூ.200 அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க முடியும். ஆனால் அதிகாரிகள் இதில் நடவடிக்கையே எடுப்பதில்லை. மேலும்,புதுச்சேரியை அழகுப்படுத்தும் நோக்கில் போஸ்டர், பேனர்கள் போன்றவை வைக்க 2009-ல் தடை விதிக்கப்பட்டது. அந்த தடை கோப்பில் மட்டும் உள்ளது " என்கின்றனர்.
நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்க மாநில செயலர் ரமேசு கூறுகையில், "புதுச்சேரியை ‘பேனர் சேரி’ என்று மாற்றி விடலாம். புதுச்சேரியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 23 பேர் வரை உள்ளனர். அத்துடன் உயர் அதிகாரிகள் 50 பேர் வரை உள்ளனர். அவர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி பேனர்களை அகற்றாமல் தூங்குகின்றனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தி பேனர்களை அகற்றி அதற்கான செலவுகளை வைத்தவர்களிடம் வசூலிக்க வேண்டும்" என்றார்.
பாரதிதாசன் பேரன் செல்வம் கூறுகையில், "பேனர்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. முக்கியமாக முதல்வர், உள்துறை அமைச்சர் ஆகியோரின் பிறந்த நாட்களில் அடிக்கு ஒரு பேனர் சாலையில் வைக்கப்படுகிறது. இதனால் விபத்துகள் அதிகரிக்கின்றன. சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி பேனர் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாத ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபியிடம் புகார் அளித்துள்ளோம்.
ராஜீவ்காந்தி சதுக்கத்தின் வழியே சென்ற எனது நண்பர் ரோட்டரி சங்க நிர்வாகி நடராஜன், சரக்கு வாகனம் மோதி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது இறப்புக்கு காரணம் பேனர்தான் என்பது தெளிவாகியுள்ளது.
ரவுண்டானாவில் பேனர்கள் வைத்திருந்ததாலேயே அவர் உயிர் பறிபோனது. இந்த பேனர் கலாச்சாரத்தால் புதுச்சேரி சாலைகள் பயணிக்க உகந்ததாக இல்லை. நெல்லித்தோப்பு சிக்னல் அருகே கடும் வாகன நெரிசல் அதிகமுள்ள பகுதியில் பேனர் ஒன்று எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு செல்வோம்" என்றார். ஆனால், இதை எதையும் காதில் கொள்ளாமல் பேனர் விவகாரத்தில் ஆட்சியர் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago