சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததற்கு பொன்முடி மற்றும் தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை தானே விசாரிப்பதா அல்லது வேறுநீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதா என்பது குறித்து செப். 14-ம் தேதி முடிவெடுக்கப்படும், என தெரிவித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
ரூ.1.36 கோடி சொத்து குவிப்பு: கடந்த 1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த, தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி சொத்து குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகக்கூறி அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி, மாமியார் சரஸ்வதி மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2002-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. விழுப்புரம் மாவட்ட எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவந்த இந்த வழக்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதன்படி இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் வகையில் உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, இதுதொடர்பாக பதிலளிக்க பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்திருந்தார். அதன்படி இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான டெல்லி மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் தங்களது வாதத்தில், இந்த வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றியது தொடர்பாக உயர் நீதிமன்றம் நிர்வாக ரீதியாக பிறப்பித்த முடிவுகள் குறித்து இந்த நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருப்பதால் இந்த வழக்கில் உயர் நீதிமன்ற பதிவுத்துறையையும் எதிர் மனுதாரராகச் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு சேர்க்கவில்லை. அல்லது தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கும் முன்பாக லஞ்ச ஒழிப்புத்துறையின் விளக்கத்தையாவது கேட்டிருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை.
» சனாதன தர்மம் குறித்து சர்ச்சை பேச்சு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது ஆளுநரிடம் பாஜக புகார்
» தேர்தல் பணியை துரிதப்படுத்துங்கள் - மநீம நிர்வாகிகளுக்கு கமல் அறிவுறுத்தல்
கடந்த ஜூன் மாதம்தான் இந்த வழக்கில் வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு இன்னும் அவகாசம் இருப்பதை இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. இந்த வழக்கு ஏற்கெனவே முன்கூட்டியே தீர்மானித்து எடுத்ததுபோல் உள்ளது. பொதுவாக தாமாக முன்வந்து விசாரணக்கு எடுக்கப்படும் வழக்குகளை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்க வேண்டும். அந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார். ஆனால் இந்த வழக்கில் நடைமுறை வழக்கத்தைத் தாண்டி தலைமை நீதிபதியின் பார்வைக்காக மட்டுமே அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை இந்த நீதிமன்றமோ, நீங்களோ விசாரிக்க அதிகாரம் கிடையாது.
எனவே இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும். வழக்கு விழுப்புரத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட உயர் நீதிமன்றத்தின் நிர்வாக முடிவுக்கும், அமைச்சர் பொன்முடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதுதொடர்பான ஆவணங்களும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர்.
அதையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கை தானே விசாரிப்பதா அல்லது வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதா என்பது குறித்து செப்.14-ம் தேதி முடிவு செய்யப்படும் எனக்கூறி விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago