விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறியல் - தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல், சமையல் காஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க தவறிய மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் கிண்டி ரயில் நிலையத்தில் நேற்று காலை ரயில் மறியல் போராட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கட்சியினர், கிண்டி ஜிஎஸ்டி சாலையில் ஊர்வலமாக வந்து கிண்டி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடைமேடை தண்டவாளத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தால், சுமார் 30 நிமிடங்கள் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், கே.பாலகிருஷ்ணன் உள்பட 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் வைத்தனர்.

முன்னதாக கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விலைவாசி உயர்வு விஷம்போல் ஏறி உள்ளது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்ததும் 2 கோடிபேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என கூறிவிட்டு, பல கோடி இளைஞர்களை வேலையிலிருந்து மோடி அரசு துரத்தி உள்ளது.

விலைவாசி உயர்வு, வேலையின்மை, சிஏஜி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், இந்த பிரச்சினைகளை திசை திருப்ப மத்திய பாஜக அரசு சதி செய்கிறது. இதற்காகதான் ஒரே நாடு, ஒரே தேர்தல், ‘இந்தியா’வை ‘பாரத்’ என பெயர் மாற்றம், சனாதனத்தை எதிர்த்து பேச்சு என பல பிரச்சினைகளை எழுப்புகிறது.

50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது: இந்த போராட்டத்தில் தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் வே.ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், மூலக்கடை யூகோ வங்கி முன்பு அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், திருவொற்றியூரில் மத்திய குழுஉறுப்பினர் உ.வாசுகி, அண்ணாசாலை அஞ்சல் தலைமையகம் முன்பு மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் உள்ளிட்டோர் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.தமிழகம் முழுவதும் நடந்த மறியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE