ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 2 மாதத்துக்கு 144 தடை உத்தரவு

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் அறிக்கையில் கூறியது: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்.11-ல் இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அக்.30-ம் தேதி கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் பொருட்டு நாளை (செப்.9) முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இந்த உத்தரவால் மாவட்டத்தில் பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்தவும், பொது இடங்களில் 5 பேர் மற்றும் அதற்கு மேற்பட்டோர் கூடவும் தடை விதிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் போராட்டங்களுக்கு முறையான அனுமதி பெற்று நடத்தலாம்.

மேலும் மாவட்டத்தில் நாளை முதல் (செப்.9) முதல் 15-ம் தேதி வரையும், அக்.25 முதல் 31-ம் தேதி வரையும் வெளிமாவட்டங்களில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வாடகை வாகனங்களில் தலைவர்களின் நினைவு நாள், பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு மரியாதை செலுத்த வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சொந்த வாகனங்களில் வருவோர் அந்தந்த டிஎஸ்பி அலுவலகங்களின் வாகன அனுமதி சீட்டு பெற்றுவர வேண்டும். வாகனங்களில் ஒலிபெருக்கிகள் அமைத்துக் கொண்டோ, பேனர்கள் கட்டிக்கொண்டோ வரக்கூடாது. வழிகளில் பட்டாசுகள் வெடிக்கவோ மேற்கூரைகளில் பயணிக்கவோ அனுமதியில்லை என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE