சேலத்தில் தொடர் மழையால் நிரம்பி வழியும் கழிவுநீர் கால்வாய்கள்: தூர்வார நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சேலம்: சேலத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கழிவுநீர் கால்வாய்கள் நிரம்பி கழிவுகள் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுநீர் கால்வாய்களை தூர்வார மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சேலம் மாநகரில் நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் 5 மணி வரை கனமழை பெய்தது. இதனால், மாநகரின் பல பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி, சாலைகளில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பாதாள சாக்கடைகளில் இருந்தும் கழிவு நீர் வெளியேறி சாலையில் தூர்நாற்றம் வீச ஓடியது.

தொடர்ந்து நேற்று மதியம் 3 மணிக்கு தொடங்கிய மழை மாலை 4.50 மணி வரை கொட்டியது. இந்த மழையால் மாநகரில் தூர் வாரப்படாமல் உள்ள சாக்கடை கால்வாய்கள், சிறிது நேரத்தில் நிரம்பின. தாழ்வான பகுதிகளில் கால்வாய்களில் இருந்து வெளியேறிய சாக்கடை கழிவு வீடுகளை சூழ்ந்தன.

எனவே, சாக்கடை கால்வாய்கள், ராஜ வாய்க்கால்கள், ஓடைகளில் தூர்வாரும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. மழையால் மாவட்டம் முழுவதும் குளுமையான சீதோஷ்ண நிலை உருவாகியுள்ளது.

அதேபோல, ஏற்காட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மிகவும் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. காலை முதல் இரவு வரை பனி மூட்டமாக காட்சியளிக்கிறது. பகலில் முகப்பு விளக்கை எரியூட்டியபடி வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்லும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): எடப்பாடி 27, சேலம் 10.6, மேட்டூர் 3.6, ஓமலூர், தம்மம்பட்டி தலா 2, ஏற்காடு, சங்ககிரி தலா 1 மிமீ மழை பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE