பட்டியலினத்தவருக்கு முதல்வர் பதவி கொடுத்து சமூக நீதியை பாதுகாக்க ஸ்டாலின் தயாரா? - வானதி சீனிவாசன் கேள்வி

By செய்திப்பிரிவு

கோவை: முதல்வர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விட்டுக்கொடுத்து சமூக நீதி, சமத்துவத்தைப் பாதுகாக்க மு.க.ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா என எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (செப்.7) அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கொசு, டெங்கு, மலேரியா, கரோனா போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்" என்று பேசினார். இது, நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்பின், நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. ஜாதி வேறுபாடுகளைதான் ஒழிக்க வேண்டும் என கூறினேன் என இப்போது விளக்கம் அளித்துள்ளார்.

பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வையும், பெண்ணடிமைத்தனத்தையும் நியாயப்படுத்தும் சிந்தனைகளைதான் ஒழிக்க வேண்டும் என உதயநிதி பேசினார் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வருக்கு மனசாட்சி இருக்குமானால், பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வை முதலில் திமுகவில் ஒழிக்க வேண்டும். கருணாநிதி மகன் என்ற பிறப்பின் அடிப்படையில் திமுக தலைவராகவும், முதல்வராகவும் ஆனவர்தான் ஸ்டாலின். உதயநிதியும் அப்படித்தான். திமுக தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் வர முடியுமா?. முதலமைச்சர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விட்டுக் கொடுத்து சமூக நீதி, சமத்துவத்தைப் பாதுகாக்க ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா?

தனி தொகுதியாக இருக்கும்வரை பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வந்த திமுக துணைப் பொதுச்செயலர் ஆ.ராசாவை, பெரம்பலூர் பொது தொகுதியானதும் நீலகிரி தொகுதிக்கு அனுப்பியது திமுக.

முதல்வரையும் சேர்த்து 35 பேரைக் கொண்ட திமுக அமைச்சரவையில், கடைசி இரண்டு இடங்களில் அதாவது 34, 35-வது இடத்தில் இருப்பவர்கள் அமைச்சர்கள் மதிவேந்தன், கயல்விழி ஆகியோர். இருவரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்குப் பிறகு அமைச்சர்களாக பதவியேற்ற உதயநிதிக்கு 10-வது இடமும், கடைசியாக அமைச்சரான டி.ஆர்.பி.ராஜாவுக்கு 33-வது இடமும் அளிக்கப்பட்டுள்ளது. இப்படி சமூக நீதி, சமத்துவத்தை கொன்றுவிட்டு மற்றவர்களுக்கு பாடம் எடுப்பதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE