மதுரை | மீனாட்சி அம்மன் கோயில் அருகே பானிபூரி உற்பத்தி மையத்தில் தீ விபத்து

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பானிபூரி உற்பத்தி மையத்தில் பேட்டரி வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் கூரை ஓடுகள் எரிந்து சேதமடைந்தது. இதனை தீயணைப்பு வீரர்கள் ஒருமணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் வடக்குமாசி வீதி ராமாயணச்சாவடி பகுதியில் உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த நேபால் சிங் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவர் பானிபூரி உற்பத்தி செய்து மதுரையின் பல பகுதிக்கும் விற்பனை செய்து வருகிறார். இதற்காக வீடு வாடகைக்கு எடுத்து பானிபூரி உற்பத்தி செய்து வருகிறார். இதில் அம்மாநிலத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை பார்க்கின்றனர். இங்கு ஓட்டுக் கூரையுடைய முதல் மாடியில் வழக்கம்போல் மின்சார இணைப்புகள் மூலம் பேட்டரிகளுக்கு சார்ஜ் ஏற்றியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலையில் முதல் மாடியிலிருந்த பேட்டரி வெடித்துச் சிதறியதில் தீப்பற்றி எரிந்து புகை மூட்டமாக பரவியது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பெரியார் நிலைய தீயணைப்பு நிலைய மாவட்ட உதவிஅலுவலர் சுரேஷ்கண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஒருமணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். தீவிபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE