தி.மலையில் அமைச்சர் உதயநிதியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி: இந்து முன்னணியினர் கைது

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: சனாதன தர்மத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து இந்து மதத்தை இழிவுப்படுத்தியதாகக் கூறி, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உருவ பொம்மையை திருவண்ணாமலையில் எரிக்க முயன்ற இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்தனர்.

சனாதன தர்மத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து முன்னணி சார்பில் திருவண்ணாமலை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அருகே இன்று (செப்.7) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் நாக.செந்தில் தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் கோ.மகேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் இரா.அருண்குமார், பாஜக மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்று அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.

அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையிலான காவல் துறையினர், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்தனர். மேலும், ஆர்ப்பாட்டத்தை முடித்து கொள்ள வேண்டும் என எச்சரித்தனர். இதனால் இரண்டு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையில், மறைவாக வைத்திருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உருவ பொம்மையை கொண்டு வந்து மாவட்ட பொது செயலாளர் வழக்கறிஞர் இரா.அருண் குமார் தீயிட்டு எரிக்க முயன்றார். இதையறிந்த காவல் துறையினர், உருவ பொம்மையை கைப்பற்ற முயன்றும் பலனில்லை. இருப்பினும், உருவ பொம்மையை கீழே போட்டு இந்து முன்னணியினர் மிதித்தனர். பின்னர், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, உருவ பொம்மையை காவல் துறையினர் கைப்பற்றினர்.

இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, இந்து முன்னணியினர் சுமார் 80 பேரை போலீஸார் கைது செய்தனர். அப்போது வாகனத்தில் ஏற மறுத்த அவர்களை, வலுக்கட்டாயமாக ஏற்றினர். இதனால், முத்துவிநாயகர் கோயில் தெருவில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE