கும்பகோணம் | இ.கம்யூ கட்சியினர் ரயில் மறியலில் தள்ளுமுள்ளு: காவல் ஆய்வாளர் சீருடையைப் பிடித்ததால் பரபரப்பு

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் ரயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட போது, காவல் ஆய்வாளரின் சீருடையைப் பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் சி.நாகராஜன், மாநகரக் குழு செயலாளர் கா.செந்தில் குமார், சி.முரளிதரன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்று விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலை வழங்கவும், நூறு நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்துக் கண்டன முழக்கமிட்டபடி, கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட ஊர்வலமாக அங்கு வந்தனர்.

இதனையறிந்த கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்தி வாசன் தலைமையிலான போலீஸார், அவர்களை ரயில் நிலையத்திற்குள் உள்ளே விடாதவாறு பேரிகார்டால் மறித்தனர். இதனையடுத்து அவர்கள், ரயில் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து கண்டன முழக்கமிட்டனர். இதற்கிடையில் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், மற்றொரு வழியாக ரயில் நிலையத்திற்குள் சென்று, மயிலாடுதுறையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் இன்ஜின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையறிந்த போலீஸார், அவர்களை மீட்கும் போது, இருதரப்பினருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், மேற்கு காவல் நிலைய எஸ்ஐ ராஜேஷ் மற்றும் போலீஸார் கோ.செல்வம், ந.ஜெகதீசன் ஆகியோரை ரயில் இன்ஜின் முகப்பில் தள்ளியதில், அவர்களது சீருடை கரையானது. மேலும் சுவாமி மலை காவல் ஆய்வாளர் சிவசெந்தில் குமாரின் சீருடை அணிந்திருந்த சட்டையைப் பிடித்து இழுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பைச் சேர்ந்த 3 பேரின் சட்டை கிழிந்தது.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 55-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். இதனையடுத்து அந்த ரயில் சுமார் 30 நிமிடத்துக்கு பிறகு திருச்சியை நோக்கி புறப்பட்டுச் சென்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE