பல்லடம் அருகே முக்கிய குற்றவாளி தப்பியோட முயன்றதால் துப்பாக்கிச் சூடு: மாவட்ட எஸ்.பி. பேட்டி

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: பல்லடம் அருகே 4 பேர் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான வெங்கடேஷ் தப்பியோட முயன்றதால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது என மாவட்ட எஸ்,பி. சாமிநாதன் தெரிவித்தார்.

பல்லடம் போலீஸ் நிலையத்தில் திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சாமிநாதன் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளக்கிணறை சேர்ந்த மோகன்ராஜ் (49), அவரது சகோதரர் செந்தில்குமார் (46), தாயார் புஷ்பவதி (68), சித்தி ரத்தினாம்பாள் (59) ஆகியோரை, கடந்த 4-ம் தேதி இரவு ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. குற்றவாளிகளைக் கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனால் விரைவாகக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும்.

சம்பவத்தன்று கள்ளக்கிணறு பகுதியில் 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்தது. அப்போது அங்கே நிலத்தின் உரிமையாளர் மோகன்ராஜ் வந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே மோகன்ராஜுடன் அவர்களுக்கு முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளது. குடிபோதையிலும் இருந்தனர். ஆனால் முன்விரோதம் முக்கியக் காரணமாக இருக்கின்றது.

முதலில் கொலை வழக்கில் தொடர்புடைய செல்லமுத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில் மேலும், கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் என்ற ராஜ்குமார் என்ற குட்டி, சோணை முத்தையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக வெங்கடேஷின் தந்தை ஐயப்பன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வெங்கடேஷ் கொடுத்த தகவலின் பேரில், கைப்பற்ற போலீசார் சென்றனர். அப்போது அவர் போலீஸாரை தள்ளிவிட்டு தப்ப முயன்றார். இதன் காரணமாக சிறிய அளவில் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE