ஒட்டன்சத்திரத்தில் சாலையில் திடீர் பள்ளம்: பொதுமக்கள் அதிர்ச்சி

By ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள திருவள்ளுவர் சாலையில் இன்று (செப்.6) மாலை திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஒட்டன்சத்திரம் நகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர் சாலை பேவர் பிளாக் கற்களால் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் இன்று (செப்.6) மாலை இப்பகுதியில் வசிக்கும் சிவக்குமாரின் வீட்டின் முன்பு உள்ள சாலை திடீரென பயங்கர சத்தத்துடன் உள்வாங்கியதில் 7 அடி ஆழத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.

இதைக் கண்டு அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவலறிந்து நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை ஆய்வு செய்தனர்.

இது குறித்து ஒட்டன்சத்திரம் நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: “பள்ளம் ஏற்பட்ட பகுதியில் முன்பு செப்டிக் டேங்க் இருந்திருக்கலாம். அந்த வழியாக அதிக பாரத்துடன் வாகனம் சென்ற போது திடீரென பள்ளம் ஏற்பட்டிருக்கலாம். ஆய்வுக்கு பின் பள்ளம் குறித்து தெரிய வரும். சாலையை சீரமைக்கும் பணி நடக்கிறது” என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE