தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தை ரூ.29.93 கோடியில் சீரமைத்தும் உட்கார வசதி இல்லை!

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.29.93 கோடியில் புனரமைக்கப்பட்ட தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருக்கைகள் இல்லாததால் பயணிகள் பேருந்துக்காக நின்று கொண்டே இருக்க வேண்டிய நிலையால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தஞ்சாவூர் நகரை அழகுபடுத்தும் விதமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.29.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பழைய பேருந்து நிலையம் புனரமைக்கப்பட்டது. அதன்பின், இதை 2021 டிச.8-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

அதன்படி, புனரமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில், 39 பேருந்து நிறுத்தங்கள், 93 கடைகள், 4 பொதுக் கழிப்பறைகள், தலா ஒரு கண்காணிப்பு அறை, காவலர் அறை, 5 பயணிகள் காத்திருப்போர் அறை, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆக்கிரமித்த கடைக்காரர்கள் இதையடுத்து, பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை மாநகராட்சி நிர்வாகம் பொது ஏலம் விட்டது.

இதில், ஒவ்வொரு கடையும் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை மாத வாடகைக்கு ஏலம் போயின. ஏலம் எடுத்த வியாபாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துடன், கடைகளுக்கு முன்பகுதியில் உள்ள இடத்தையும் சேர்த்து ஆக்கிரமித்துக் கொண்டனர். இதில் பயணிகள் காத்திருப்பு அறைகளும் தப்பவில்லை.

உடைந்த இருக்கைகள் ஒரு அறையில்
பூட்டி வைக்கப்பட்டுள்ளன. படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

மேலும், பேருந்து நிலையத்தில் பயணிகள் அமருவதற்காக அமைக்கப்பட்ட இரும்பு சாய்வு நாற்காலிகளும் உடைந்துவிட்டன. இதனால், பயணிகள் உட்கார இடம் இல்லாமல் பேருந்துக்காக நின்று கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் கூறியது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் பயணிகள் நலன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, வருவாய் மற்றும் வியாபாரிகள் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் மக்களின் வசதிக்காக பல கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்கின்றன. ஆனால் மாநகராட்சி நிர்வாகமோ பழைய பேருந்து நிலையம் பராமரிப்பில் அலட்சியமாக செயல்படுவதாக தெரிகிறது என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பழைய பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர போடப்பட்டிருந்த இரும்பு நாற்காலிகள் உடைந்துவிட்டதால், அவற்றை அங்குள்ள மற்றொரு அறையில் வைத்துள்ளோம். சேதமான இருக்கைகளுக்கு பதிலாக புதிய இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE