பாளையங்கோட்டை வடக்குபாளையத்தில் கலுங்கு ஓடையில் சிறுபாலம் கட்டும் பணி எப்போது முடியும்?

By செய்திப்பிரிவு

கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை வடக்குபாளையத்தில் கலுங்கு ஓடையில் சிறுபாலம் கட்டும் பணி விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டைவடக்குபாளையம் ஊராட்சி உள்ளது. இக்கிராமத்தின் மயானம் செல்லும் வழியில் கலுங்கு ஓடை உள்ளது. இப்பகுதி விவசாயிகள், இந்த ஓடையை கடந்துதான் தங்களின் விளைநிலத்துக்கு உரம், விதைகள் உள்ளிட்டவைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள், மணிலா மூட்டைகளை இந்த வழியில்தான் எடுத்து செல்கின்றனர். கலுங்கு ஓடையைத் தாண்டி செல்வதில் பெரும் சிரமம் நிலவியது. மழைக் காலங்களில் விவசாயிகள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.

இச்சிக்கலைப் போக்க, கலுங்கு ஓடையில் சிறிய பாலம் அமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை மனு அனுப்பி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு இந்த கலுங்கில் சிறிய பாலம் கட்டிட உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தேசிய ஊரக வேலைத்திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ப்பட்டு. திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், 4 ஆண்டுகளைக் கடந்தும் பணி முடியவில்லை.

இதற்கிடையே, இப்பகுதி விவசாயிகள் நலன் கருதி ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில், கட்டப்பட்டு முழுமை அடையாமல் உள்ள சிறுபாலம் அருகில் மண் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியே தற்போது இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. விவசாயிகள் விளை நிலங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் சென்று வருகின்றனர்.

ஆனாலும், பெரு மழை வந்தால் இந்த மண் பாதை தாங்காது. எனவே, அதற்கு முன் இந்த சிறுபாலம் பணி முழுமை அடைய வேண்டும். அப்போதுதான் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை விளைநிலங்களுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்று இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE