எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இண்டியா பெயர் வைத்ததும் பாஜக பயந்துவிட்டது - திமுக எம்பி திருச்சி சிவா கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, திருச்சி சிவா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

டிஆர் பாலு பேசுகையில், "இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவித அஜெண்டாவும் இல்லாமல் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடவுள்ளது. இதற்கு முன்புகூட நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடந்துள்ளது. ஆனால், அப்போது விவாதிக்க பொருள் இருந்தது. இப்போது பொருள் இல்லாமலே சிறப்பு கூட்டத்தொடர் நடக்கவுள்ளது.

திமுக சார்பில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சிஏஜி ரிப்போர்ட், நீட் தேர்வு, ஒரே தேசம் ஒரே தேர்தல் மற்றும் விஸ்வ கர்மா திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளோம். சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் என்னென்ன விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் ஆலோசனை செய்து அது குறித்து பிரதமருக்கு கடிதம் அனுப்புவோம்." என்றார்.

அப்போது பாரத் பெயர் மாற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட அதற்கு பதிலளித்தவர், "நாங்கள் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தோம். ஒவ்வொரு விஷயத்தையும் நாங்கள் விவாதித்தோம். இறுதியாக இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் அனுப்பப்படும்."

அப்போது திருச்சி சிவா பேசுகையில், "எங்கள் கூட்டணிக்கு இண்டியா என்று பெயர் வைத்தவுடன் பாஜக பயந்துவிட்டது. இப்போது அந்த பெயரை கைவிட்டுவிட்டார்கள். விரைவில் தேர்தல் முடிந்ததும் அதிகாரத்தை கைவிட்டு இந்தியாவை எங்களிடம் ஒப்படைப்பார்கள்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE