புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலையில் பாலுடன் பிஸ்கெட்டும் பழமும், மாலையில் சிறுதானிய உணவும் தரப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுவை அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தின விழா இன்று காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் 21 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி வாழ்த்தினர். விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியது: ''நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு ஆசிரியர்களின் கடின உழைப்புதான் காரணம். நீட் தேர்வு பயிற்சி அளிக்க சில நிறுவனங்கள் ரூ.1.50 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால், நமது அரசு பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி அளித்து கிராமப்புற மாணவர்கள்கூட நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மருத்துவ கல்வியில் தற்போது 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளோம். இதன்மூலம் 37 அரசு பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
அதுமட்டுமின்றி பிற மருத்துவ கல்வியிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைக்கும். அரசின் வசதிகளை பயன்படுத்தி மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். உள் ஒதுக்கீட்டில் மட்டுமின்றி மெரிட் அடிப்படையிலும் அரசு பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்புக்கு தேர்வாக வேண்டும். கல்வித் துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது. பள்ளிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்காக துப்புரவு பணியை தனியாரிடம் வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். கழிவறைகளை சுத்தமாக வைக்க வேண்டும். மாணவர்களுக்கு நல்ல குடிநீர் வழங்க வேண்டும். கூட்டுறவு கல்வியியல் கல்லூரியை அரசே ஏற்று நடத்தப்படும். புதுச்சேரி அரசு கூட்டுறவு கல்வியியல் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டு நடத்தப்படும்.
அரசுப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். தற்போது ஒப்பந்த அடிப்படையில் ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் மொழி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம் கோரி வருகின்றனர். இவர்களின் பணி நிரந்தரம், சம்பள உயர்வில் அரசு கவனம் செலுத்தும். மத்திய அரசு நினைப்பதை புதுச்சேரி அரசு செய்து சிறந்த மாநிலமாக்கும்.
காலை உணவு திட்டத்தில் தற்போது பால் மட்டும் வழங்கப்படுகிறது. கடந்த காலத்தில் பிஸ்கெட், பழம் கொடுத்து வந்தோம். மீண்டும் காலை உணவு திட்டத்தில் பாலோடு, பிஸ்கெட், பழமும் விரைவில் வழங்கப்படும். மாலையில் மாணவர்கள் பள்ளி விட்டு செல்லும்போது சிறுதானிய உணவும் வழங்கப்படும். பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் உயர் கல்வி பெறும் வகையில் புதிதாக கல்லூரிகளும் தொடங்கப்படும்" என்று குறிப்பிட்டார்.
விழாவுக்கு தலைமை வகித்த அமைச்சர் நமச்சிவாயம் பேசியது: ''பதவி உயர்வு, இடமாறுதல் என அரசு பல்வேறு மாற்றங்களை செய்து கல்வித் துறையை வளர்ச்சிப் பாதையில் அரசு கொண்டு செல்கிறது. அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வை எதிர்கொள்ளும்வகையில் பள்ளி கல்வியை சிபிஎஸ்இ திட்டமாக மாற்றியுள்ளோம். கடந்த ஆட்சியில் நிறுத்திய சைக்கிளை வழங்கியுள்ளோம். லேப்டாப் வழங்க டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் லேப்டாப் வழங்க 45 நாள் கால அவகாசம் கோரியுள்ளனர். இதன்பின் லேப்டாப் வழங்கிவிடுவோம். காலையில் பாலுடன், ரொட்டி, பிஸ்கெட் மீண்டும் தர முதல்வர் கூறியுள்ளார். பிஸ்கெட்டையும் மாணவர்கள் சலிப்படையாத வண்ணம் விதவிதமாக வழங்கும்படி கூறினார்.
நடப்பு கல்வியாண்டில் ரூ.1,200 கோடி கல்வித் துறைக்கு ஒதுக்கியுள்ளோம். கடந்த பட்ஜெட்டை விட ரூ.200 கோடி அதிகம். காலி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளோம். ஆளுநர் அறிவுறுத்தலின்பேரில் ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல் நேரடியாகவே ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க உள்ளோம். மதிப்பெண் அடிப்படையில் நிரப்ப வழிகாட்டுதல் நெறிமுறை வெளியிடப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்" என்றார். நிகழ்வில் பேரவைத்தலைவர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி வரவேற்றார். துணை இயக்குநர் சிவகாமி நன்றி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago