துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை: ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘மாநில பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. யுஜிசி சார்பில் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை’ என துணைவேந்தர் நியமன விவகாரம் குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் அண்மையில் காலியான சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடங்கள் என 3 பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருந்து வருகின்றன. துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் மற்றும் ஆளுநர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவர். இந்தக் குழுதான், துணைவேந்தர் பதவிக்கான நபர்களை தேர்வு செய்து ஆளுநருக்குப் பரிந்துரைக்கும். இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில், துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என ஆளுநரின் நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநரின் இந்த கருத்துக்கு, தமிழக உயர் கல்வித் துறை தரப்பில் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தக் கடிதத்தில், ‘பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள்படி, மாநில பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. யுஜிசி சார்பில் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை’ என்ற விதிமுறைகள் உட்பட பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டி தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE