ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு: அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞரும், ஜெ.ஜெயலலிதா ஃபாலோயர்ஸ் கட்சியின் நிறுவன தலைவருமான P.A.ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி A.ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. ஆறுமுகசாமி ஆணையம், தனது அறிக்கையை 2022-ம் ஆண்டு அக்டோபர் 17ல், சமர்ப்பித்துள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டது. ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையம் அமைக்கப்பட்டு, 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆணையத்தின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

மக்களின் வரிப்பணத்தை செலவிட்டு அமைக்கப்பட்ட ஆணையம் அளித்த பரிந்துரைகளின்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பொதுமக்களும், அதிமுகவினரும் காத்திருக்கும் நிலையில், அந்த அறிக்கையை அரசு கிடப்பில் போட்டுள்ளது. எனவே, ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசிடம் ஜூலை 9-ம் தேதி அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE