பல்லடம் கொலை வழக்கு | தப்பிக்க முயன்றபோது கைதிக்கு கால் எலும்பு முறிவு: கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: பல்லடத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான நபர் தப்பிக்க முயற்சித்தபோது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த நபர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றவர்களை போலீஸ் தேடி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு தனது தோட்டத்தில் மது அருந்திய நபர்களை தட்டிக் கேட்ட நபர் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் நான்கு பேர் உடலும் பரிசோதனை செய்யப்பட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முழுவதும் உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கொலையாளிகளை கைது செய்யும் வரை இறந்தவர்களின் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி இறந்தவர்களின் உடலை வாங்காமலேயே திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்துவை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று காலை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதத்தை தொட்டம்பட்டி வாட்டர் டேங்க் மேல் மறைத்து வைத்திருப்பதாக கூறி அதை எடுத்துத் தருவதாக கூறி மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது ஏறிச் செல்லும் போது பின்னே சென்ற போலீஸாரை தள்ளிவிட்டு விட்டு செல்லமுத்து நீர்த்தேக்க தொட்டி மீது இருந்து குதித்து தப்பி செல்ல முயற்சி செய்த போது கால் முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கால் முறிவு ஏற்பட்ட செல்லமுத்துவை காவல்துறையினர் உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். தற்போது மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு குற்றவாளிகளையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இரண்டாவது நாளாக பல்லடம் நகர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE