திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் சிக்கியுள்ளார். குற்றவாளிகளை கைது செய்ய கோரி பல்லடத்தில் பாஜக, இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லடம் கள்ளக்கிணறை சேர்ந்தவர் மோகன்ராஜ் (49). மனைவி, மகன் மற்றும் தாய் ஆகியோருடன் வசித்து வந்தார். மோகன்ராஜ் விவசாயம் மற்றும் புண்ணாக்கு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம் மாலை அதேபகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் இருவர், மோகன்ராஜின் நிலத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். இதனை மோகன்ராஜ் தட்டிக்கேட்கவே அவரையும், சகோதரர் செந்தில்குமார்(46), தாய் புஷ்பவதி(68), சித்தி ரத்தினாம்பாள் (59) ஆகியோரையும் 3 பேரும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர்.
பல்லடம் போலீஸார் 4 பேரின் சடலங்களையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனையடுத்து பல்லடம் நகரம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி சம்பவ இடத்துக்கு சென்று, குற்றவாளிகளை தேடும் பணியை முடுக்கிவிட்டார். 5 மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து, 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பல்லடம் நகரில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன்ராஜ் உணவகம் நடத்தி வந்தபோது, அந்த உணவகத்தின் எதிரே வெங்கடேஷ் (எ) செல்வம் என்பவர் இறைச்சிக் கடை நடத்தி வந்தார். பின்னர், உணவகத்தை வேறு நபருக்கு வாடகைக்கு மோகன்ராஜ் மாற்றிவிட்டார். அப்போது அங்கு தொழில் செய்து வந்த நபர், இறைச்சி எடுத்ததில் கடன் வைத்ததாக உணவகத்தில் இருந்த சிலிண்டரையும், கோழிக்கூண்டுகளையும் வெங்கடேஷ் தூக்கிச்சென்றதால் முன்விரோதம் ஏற்பட்டது. அதன்பின்னர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேஷ், மோகன்ராஜின் சகோதரர் செந்தில்குமாரிடம் 2 மாதங்கள் மட்டும் ஓட்டுநராக வேலை செய்துள்ளார்.
தேடப்பட்டுவரும் வெங்கடேஷ் (எ) செல்வம் (27), திருநெல்வேலி மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர். இவர் மீது கொலை முயற்சி, வீடு புகுந்து மிரட்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. மற்ற இருவரும் திருச்சி மாவட்டம் மணப்பாறை அணைக்கரைப்பட்டியை சேர்ந்த செல்லமுத்து (24), தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த சோனை முத்தையா(22) என தெரியவந்தது. இதில் செல்லமுத்துவை பிடித்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்” என்றனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சந்தித்து ஆறுதல் கூறினார். மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், எம்எல்ஏக்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் நேற்று மருத்துவமனைக்கு வந்து சடலங்களை பார்வையிட்டனர்.
உயிரிழந்த மோகன்ராஜ் பாஜகவின் மாதப்பூர் ஊராட்சி கிளைத் தலைவர் என்பதால், நேற்று காலை முதலே பாஜகவினர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் அங்கு திரண்டனர். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலையை நேரில் பார்த்த மோகன்ராஜின் 12 வயது மகன் பதைபதைப்போடு பேசும் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
முதல்வர் நிவாரணம்: இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago