செப்.16-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறித்து விவாதிக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 16-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறையைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய அரசு, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சேர்க்காததால், அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர், குழுவில் இருந்து விலகியுள்ளார்.

இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாகத் திகழும் திமுகவைச் சேர்ந்தவர்கள் யாரையும் உறுப்பினராக நியமிக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், 28 கட்சிகளுடன் ‘இண்டியா’ கூட்டணி தேர்தல் களத்தில் பாஜகவை கடுமையாக எதிர்கொள்ள வேண்டிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு செப்.18 முதல் 22-ம் தேதி வரை 5 நாட்கள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்நிலையில், திமுக எம்.பி.க்கள் கூட்டம் வரும் 16-ம் தேதி காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதில், அனைத்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும். எந்தெந்த விவகாரங்கள் குறித்து பேச வேண்டும்.குறிப்பாக, `ஒரே நாடு, ஒரே தேர்தல்',சிஏஜி அறிக்கையில் ரூ.7.50 லட்சம் கோடி தொடர்பாக தரப்பட்ட விவரங்கள், மணிப்பூர், ஹரியாணா மாநிலவிவகாரங்கள் குறித்த அறிவுறுத்தல்கள் எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE