தவறு செய்தால் சட்டரீதியாக எதிர்கொண்டே ஆகவேண்டும் - டிடிவி.தினகரனுக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டம் அனைவருக்கும் பொதுவானதுதான். நாட்டின் குடியரசுத் தலைவரானாலும், பிரதமரானாலும் தவறு செய்தால் சட்ட ரீதியாக எதிர்கொண்டு தான் ஆகவேண்டும் என, டிடிவி.தினகரனை திவாலானவர் என அறிவிக்கக்கோரும் வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 1995-96 காலகட்டத்தில் முன்னாள் எம்.பி.யான அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனின் வங்கி கணக்கில் வெளிநாட்டில் இருந்து ரூ. 62.61 லட்சம் அமெரிக்க டாலர் அங்கீகாரமற்ற முகவர் மூலமாக டெபாசிட் ஆனதாகவும், பின்னர் அவர் இந்த தொகையை இங்கிலாந்தில் உள்ளநிறுவனங்களுக்கு சட்டவிரோத மாக மாற்றியதாகவும், டிடிவி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர் ஃபெரா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ரூ.28 கோடி அபராதம்: இந்த வழக்கில் கடந்த 1998-ம்ஆண்டு டிடிவி.தினகரனுக்கு விதிக்கப்பட்ட ரூ. 31 கோடி அபராதத்தை, பின்னர் அமலாக்கத் துறை மேல்முறையீட்டு ஆணையம் ரூ.28 கோடியாக குறைத்தது.

இந்த அபராதத்தை அவர் இதுவரையிலும் செலுத்தவில்லை. இதனால் அவரை திவாலானவர் என அறிவிக்கக் கோரும் வகையில் அமலாக்கத்துறை நோட்டீஸ் பிறப்பித்தது. அதை எதிர்த்து தினகரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த2003-ம் ஆண்டு, இது உரிமையியல் நீதிமன்றத்தால் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினை எனக் கூறி தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ‘‘ஃபெரா சட்டத்தின்படி விதிக்கப்பட்ட ரூ.28 கோடிஅபராதத்தை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஆனால்அதன்பிறகும் அவர் இந்த அபராதத்தை இத்தனை ஆண்டுகளாகியும் செலுத்தவில்லை. இதனால் அவரை திவாலானவர் என சட்ட ரீதியாக அறிவிக்கும் வகையில் நோட்டீஸ் பிறப்பித்ததில் எந்ததவறும் இல்லை. இது உரிமையியல் பிரச்சினை கிடையாது’’ என்றார்.

நன்மதிப்பு கெடும்: டிடிவி.தினகரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், ‘‘தினகரனுக்கு உள்ள நன்மதிப்பை கெடுக்கும் நோக்கில் இந்த நோட்டீஸை பிறப்பித்துள்ளனர். இது சட்ட ரீதியாக தவறு’’ என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘100 சதுர அடியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வி்ட்டாலே 40-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் புடைசூழ்ந்து, புல்டோசருடன் சென்று அந்த ஆக்கிரமிப்பை அகற்ற முற்படுகின்றனர். ஆனால் இங்கே ஒருவர் ரூ.28 கோடியை ஆண்டுக்கணக்கில் செலுத்தாமல் உள்ளார். இத்தனை ஆண்டுகாலமாக அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது. அதை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.

மேலும், முன்னாள் எம்.பி என்பதற்காக அபராதத்தை செலுத்த மாட்டேன் எனக் கூறுவீர்களாக என டிடிவி.தினகரன் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சட்டம் அனைவருக்கும் பொதுவானதுதான்.

குடியரசு தலைவரேயானாலும்...: நாட்டின் குடியரசுத் தலைவரானாலும், பிரதமரானாலும் தவறுசெய்தால் சட்டரீதியாக எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். என்னை ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறிவிட முடியுமா? அமலாக்கத்துறை விதித்துள்ள அபராதத்தை செலுத்தியிருந்தால் உங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு இருக்காதே. அபராதத்தை செலுத்த நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என்றனர். பின்னர் நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE