தமிழகத்தில் வன்முறை கலாச்சாரம் பெரிதும் தலைதூக்கியுள்ளது - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: கடந்த ஒரு மாதத்தில் தென் தமிழகத்தில் 21 வன்முறை கொலைகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் கூலிப்படையின் வன்முறை கலாச்சாரம் தலைதூக்கியுள்ளதாக தெரிவித்தார்.

பாளையங்கோட்டை மூளிக்குளம் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஜெகன் கடந்த 30-ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் பிரபுவை கைது செய்யக்கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து 5 நாட்களாக போராடி வந்த நிலையில், நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் பிரபு சரணடைந்தார். இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஜெகனின் உடலை உறவினர்கள் நேற்று பெற்றுக்கொண்டனர்.

திருநெல்வேலிக்கு வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜெகனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, ஜெகனின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஜெகன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான திமுக சேர்மனின் கணவரை கைது செய்யாமல் உடலை வாங்க மாட்டோம் என்று போராடினோம். 5 நாள் போராட்டத்துக்குப்பின் திமுக பிரமுகர் சரணடைந்துள்ளார். அப்பகுதியில் பாஜகவை வளர்த்தார் என்ற ஒரே காரணத்துக்காக கூலிப்படையை வைத்து ஜெகனை கொலை செய்துள்ளனர். சரணடைந்த திமுக பிரமுகர் மீது ஏற்கெனவே 16 கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 96 வழக்குகள் இருப்பதாக சொல்கிறார்கள். இந்தளவுக்கு தைரியம் அவருக்கு எங்கே இருந்து வந்தது?

கொலை செய்யப்பட்ட ஜெகனின் தாய்க்கு வீடு கட்டி கொடுப்பதாக உறுதி கொடுத்துள்ளேன். அது பாஜகவின் கடமை.

பல்லடத்தில் ஒரே வீட்டில் 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டுமுன் மது அருந்த வேண்டாமென கூறியதால் இந்த கொலை நடைபெற்றுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் தென் தமிழகத்தில் 21 வன்முறை கொலைகள் நடந்துள்ளன. தமிழகத்தில் எந்தளவுக்கு கூலிப்படையின் வன்முறை கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது என்பதை இது வெளிக்காட்டுகிறது. குடி, கஞ்சா புழக்கம் அதிகமாகிவிட்டது.

தென் தமிழகத்தில் வன்முறையை தடுக்க வளர்ச்சியைக் கொண்டு வர வேண்டும். வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் . இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE