பாலித்தீன் மறுசுழற்சி தொழிற்சாலை தொடங்க அனுமதிக்கக் கூடாது: சிவன்மலை மக்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருப்பூர்: காங்கயம் அருகே சிவன்மலையில் பாலித்தீன் மறுசுழற்சி தொழிற்சாலையை தொடங்க அனுமதிக்கக் கூடாது என மாவட்ட வருவாய் அலுவலரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர பொது மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நேற்று நடந்தது.

காங்கயம் அருகே சிவன்மலை பகுதியில் பாலித்தீன் மறுசுழற்சி தொழிற்சாலைக்கு அனுமதியளித்தால் ஏற்படும் பாதிப்பை விளக்கும் வகையில் முகக்கவசம் அணிந்த படி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் பாலித்தீன் மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலை தொடங்க சிலர் திட்டமிட்டுள்ளனர்.

அப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், தோட்டங்கள், அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகள், கால்நடை மேய்ச்சல் நிலங்கள் போன்றவை உள்ளன. இந்த தொழிற்சாலை இங்கு அமையும்பட்சத்தில், தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் நச்சுக்காற்றால் நுரையீரல் புற்று நோய், மூச்சுத் திணறல், சுவாச பாதிப்பு போன்ற எண்ணற்ற கொடிய நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவர்.

இதேபோல கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும்பங்காற்றும் கால்நடைகளும் பாதிக்கக்கூடும். எனவே எங்களது பகுதியில் பாலித்தீன் மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது, என குறிப்பிட்டிருந்தனர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கொடுத்த மனு: கண்டியன்கோவில் கிராமம் கருணைப்பாளையத்தில் இயங்கி வரும் எண்ணெய் ஆலையில் கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல், மழைக்காலத்தில் மழை நீரோடு கலந்து பொதுவெளியில் விடுவதை ஆலைப் பணியாளர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதனால் சுற்றுப்புறங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறி வருகிறது. நீர் குடிப்பதற்கு உகந்த நிலையில் இல்லை. கால்நடைகளுக்கு உற்பத்தி செய்யும் தீவனங்கள் மற்றும் காய்கறிகளும் விஷமாகின்றன. அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிட்டுள்ளனர்.

கூட்டத்தில் பெறப்பட்ட 466 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE