கோடநாடு வழக்கில் தனபாலிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் முடிவு

By செய்திப்பிரிவு

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு சம்மன் வழங்கி மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி (எ) பிஜின் ஆகியோரை கோத்தகிரி போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இது குறித்து மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், கோடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு, கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் எஸ்பி முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக, தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடப்பது குறித்து கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோருக்கு ஏற்கெனவே தெரியும் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, தனபால் 11-வது குற்றவாளியாகவும், ரமேஷ் 12-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். தற்போது இருவரும் ஜாமீனில் உள்ளனர். இந்நிலையில், தனபாலிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அனுமதி கேட்டு, உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை நேற்று விசாரித்த மாவட்ட நீதிபதி அப்துல் காதர், தனபாலை விசாரிக்க நீதிமன்ற அனுமதி ஏதும் தேவை இல்லை என்றும், சிபிசிஐடி போலீஸாரே சம்மன் வழங்கி விசாரித்து கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து, அடுத்த ஓரிரு நாட்களில் சிபிசிஐடி போலீஸார் தனபாலுக்கு சம்மன் அளித்து விசாரணையை தொடங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE