திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கான தங்க முதலீட்டுப் பத்திரம்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

By செய்திப்பிரிவு

சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பயன்படாத பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி தூய தங்கக்கட்டிகளாக முதலீடு செய்யப்பட்டதற்கான தங்க முதலீட்டு பத்திரத்தை, கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.4) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பலமாற்றுப் பொன் இனங்களில் திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, இதர இனங்களை மும்பையிலுள்ள ஒன்றிய அரசின் உருக்காலையில் உருக்கி தூய தங்கக்கட்டிகளாக முதலீடு செய்யப்பட்டதற்கான தங்க முதலீட்டு பத்திரத்தினை, திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஆர். அருள்முருகனிடம் வழங்கினார்.

2021-2022 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற அறிவிப்பில், “கடந்த 10 ஆண்டுகளாக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத்தங்கமாக மாற்றி திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து பெறப்படும் வட்டி மூலமாக திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளை கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும்“ என அறிவிக்கப்பட்டது.

இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் சென்னை, திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய மூன்று பகுதிகளாக பிரித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு மற்றும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் க.ரவிச்சந்திர பாபு, ஆர்.மாலா ஆகியோர் தலைமையில் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டன.

திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பலமாற்று பொன் இனங்கள் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மாலா தலைமையிலான குழுவினர் முன்னிலையில் மதிப்பீடு செய்யப்பட்டு, அரக்கு, அழுக்கு, போலிக்கற்கள் மற்றும் இதர உலோகங்களை நீக்கி, பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்றுப் பொன் இனங்கள் அறங்காவலர் குழு தீர்மானத்தின் அடிப்படையில் மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றி பாரத ஸ்டேட் வங்கியின் Revamped Gold Deposit Scheme, 2015 திட்டத்தின் கீழ் தங்கப் பத்திரமாக முதலீடு செய்திடும் பொருட்டு, 168 கிலோ 68 கிராம் 889 மில்லி கிராம் எடையுள்ள சுத்த தங்கக்கட்டிகள் திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, மும்பை கிளையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.99,77,64,472 ஆகும். மேற்படி தங்க மதிப்பீட்டுக்கு வழங்கப்படுகின்ற வட்டி வீதம் 2.25% ஆகும்.

இதன்மூலம் ஆண்டொன்றுக்கு கிடைக்கப்பெறும் வட்டித்தொகையான ரூ.2.25 கோடி இத்திருக்கோயில் மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்படும். இதற்கான தங்க முதலீட்டு பத்திரத்தினை, தமிழக முதல்வர் இன்று திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவரிடம் வழங்கினார்.

இதுபோன்று ஏற்கெனவே திருக்கோயில்களுக்கு வரப்பெற்ற பயன்பாடற்ற பலமாற்று பொன் இனங்களை உருக்கி சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றி மும்பை பாரத ஸ்டேட் வங்கியில் தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்ததன் மூலம் ஆண்டடொன்றுக்கு விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி, மாரியம்மன் திருக்கோயிலுக்கு ரூ.24.09 லட்சமும், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், பவானியம்மன் திருக்கோயிலுக்கு ரூ.1.04 கோடியும், திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு ரூ.39.13 லட்சமும், காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, காமாட்சியம்மன் திருக்கோயிலுக்கு ரூ.39.29 லட்சமும் வட்டித் தொகையாக கிடைக்கப் பெறுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE