நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்: செப்.16-ல் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை

By செய்திப்பிரிவு

சென்னை: வரும் செப்.18-ம் தேதி முதல் செப். 22-ம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறித்து விவாதிக்க, திமுக எம்.பி.க்கள் கூட்டம் வரும் செப்டம்பர் 16-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், செப்டம்பர் 16-ம் தேதியன்று, சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயத்தின் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அப்போது, திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். வரும் செப்டம்பர் 18-ம் தேதி முதல் செப்டம்பர் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறித்த பொருளில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

வரும் செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு திடீரென சமீபத்தில் அறிவித்து. இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும், பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து ஆய்வுசெய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE