தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கள்ளக்கிணறு என்ற கிராமத்தில், செந்தில்குமார் என்பவரின் வீட்டிற்கு அருகில் அவருக்கு சொந்தமான நிலத்தில் மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் செந்தில் குமாரையும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவரையும் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

உயிரிழந்த நால்வருக்கும் எனது மரியாதையை செலுத்துவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தாக்குதலில் காயமடைந்த மேலும் ஒருவர் விரைவில் உடல் நலம் தேற வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மது மிகவும் கொடூரமானது; சமூகச் சீரழிவுகளுக்கும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கும் மது தான் காரணம் என்பதற்கு இதைவிட கொடிய எடுத்துக்காட்டு எதுவும் தேவையில்லை. தங்களின் வீட்டுக்கு அருகில் மது குடிக்கக் கூடாது என்று கூறியதற்காக நான்கு அப்பாவிகளை துடிக்கத் துடிக்க வெட்டி படுகொலை செய்யும் துணிச்சல் குடிகார கும்பலுக்கு வந்திருக்கிறது என்றால், மது மனிதனை மிருகமாக்குகிறது என்று தானே பொருள்? எல்லா குற்றங்களுக்கும் தாய் மது தான் என்பதை நன்றாக அறிந்த பிறகும் இன்னும் எவ்வளவு காலத்திற்கு மது அரக்கனின் அட்டகாசத்தை அனுமதிக்கப் போகிறோம்?

மது சமூகத்தை சீரழிக்கிறது என்பதற்கு இந்தப் படுகொலைகள் மட்டுமே சான்று அல்ல. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரின் பிறந்த நாளையொட்டி, கடந்த ஒன்றாம் தேதி அவரது சக மாணவிகள் 7 பேர் வகுப் பறையிலேயே மது அருந்தி, நடனமாடியுள்ளனர். இதையறிந்த பள்ளி நிர்வாகம் அவர்களை இடை நீக்கம் செய்திருக்கிறது. அதனால் அவமானமடைந்த மாணவிகளில் ஒருவர் நஞ்சு குடித்து தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் முல்லை நகரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன், தமது தந்தை குடித்து விட்டு வந்து தாயை தாக்குவதாகவும், அதற்காக அவரை கைது செய்ய வேண்டும் என்றும் காவல் நிலையத்திற்கு சென்று புகார் செய்திருக்கிறான். மதுவால் சமூகத்தில் ஏற்பட்ட சீரழிவுகளின் பட்டியல் தொடர்கிறது.

மது சமூகத்தை சீரழிக்கிறது என்பதை அறிந்த பிறகும் அரசே மது வணிகத்தை தொடர்ந்து நடத்தும் கொடுமையை என்னவென்று சொல்வது? தமிழகத்தில் மதுவை ஒழித்து மதுவிலக்கை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று 42 ஆண்டுகளுக்கும் மேலாக பாமக போராட்டம் நடத்தி வருகிறது.

மது சமூகத்தை சீரழிக்கிறது என்ற குற்றச்சாட்டை ஒரு புறம் ஒப்புக்கொள்ளும் தமிழக அரசு, இன்னொருபுறம் அதன் மூலம் கிடைக்கும் ரூ.50,000 கோடி வருமானத்திற்காக தொடர்ந்து மது வணிகத்தை நடத்துவது நியாயமல்ல. மது விலக்கே மக்களைக் காக்கும் என்பதை உணர்ந்து தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்