போலீஸ் முன்னிலையில் டிராக்டரை ஓட்டி நெற்பயிரை சேதப்படுத்திய விவகாரம்: ஆரணி அருகே மாவட்ட நீதிபதி ஆய்வு; டிஎஸ்பியிடம் விசாரணை நடத்த முடிவு

By வ.செந்தில்குமார்

ஆரணி அருகே துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் நெற்பயிரை டிராக்டரை ஓட்டி சேதப்படுத்தியது தொடர்பாக மாவட்ட நீதிபதி மகிழேந்தி நேற்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள காமக்கூர் கிராமத்தில் நன்கு வளர்ந்த நெற்பயிர்களை காவல் துறையினர் முன்னிலையில் டிராக்டர் மூலம் சேதப்படுத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெரினா பேகம், முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குழந்தையாக வளர்த்த பயிர்

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சாவித்திரி கூறும்போது, ‘எனது தாத்தா வேலு உடையாருக்கு அண்ணாமலை, ராதாகிருஷ்ணன், கண்ணன், தசரதன் ஆகிய 4 மகன்கள். அந்தக் காலத்தில் மூத்த மகன் அண்ணாமலை பெயரில் 16 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தனர். அப்போது, மற்ற மூன்று பேரும் சிறுவர்களாக இருந்தனர்.

1991-ம் ஆண்டில் 16 ஏக்கர் நிலத்தை சகோதரர்கள் 4 பேரும் தங்களுக்குள் பங்கீடு செய்துகொண்டனர். இதை 10 ரூபாய் பத்திரத்தில் எழுதிக்கொண்டனர். அதன்படி, எனது தந்தை கண்ணனின் பங்காக வந்த 2.90 ஏக்கர் நிலத்தில், கடந்த 40 ஆண்டுகளாக பயிரிட்டு வருகிறேன். இதில், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எனது தாத்தா வேலு உடையார் இறந்துவிட்டார். அதன்பிறகுதான் சொத்துப் பிரச்சினை தொடங்கியது. 2012-ல் அண்ணாமலையின் பெயரில் இருந்த பட்டா நிலத்தை அவரது மகன் தினகரன் என்ற பிச்சாண்டி என்பவர் யாருக்கும் தெரியாமல் தனது மகள் சாமுண்டீஸ்வரி பெயருக்கு தானமாக எழுதிக் கொடுத்துள்ளார். இந்த தகவல் எங்களுக்கு தெரியவந்ததும் ஆரணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக சாமுண்டீஸ்வரி எங்களுக்கு பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்து வருகிறார்.

எங்களுக்குரிய நிலத்தில் நெல் நாற்று நடும்போதே டிஎஸ்பி ஜெரினா பேகம் எங்களை மிரட்டினார். 10 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு நிலத்தை விட்டுவிடுமாறு கூறினார். அவரது மிரட்டலையும் மீறி நாங்கள் நெற் பயிரிட்ட கோபத்தில் சாமுண்டீஸ்வரிக்கு ஆதரவாக செயல்படுகிறார். அவரது கண் எதிரிலேயே பயிர்களை டிராக்டர் ஓட்டி சேதப்படுத்தினர். சில நாட்களுக்கு முன்பு என் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்ய முயன்றனர்.

குழந்தை மாதிரி வளர்த்த பயிரை நாசம் செய்துவிட்டனர். அதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் வளர்த்த நெற்பயிர்களை சாமுண்டீஸ்வரிதான் அறுவடை செய்வார் என்று டிஎஸ்பி கூறிச் சென்றார்’ என்றார்.

சாவித்திரியின் மகன் யுவராஜ் கூறும்போது, ‘‘எங்கள் தரப்பு நியாயத்தை டிஎஸ்பி கேட்கவே இல்லை. மூலப் பத்திரம் எதுவும் இல்லாமல் பட்டாவை வைத்துக்கொண்டு பத்திரப்பதிவு செய்துள்ளனர். தினகரனுக்கு 3 மகள்கள், ஒரு மகன் இருக்கும்போது ஒரே மகளான சாமுண்டீஸ்வரி பெயரில் மொத்த நிலத்தையும் தானப் பத்திரமாக எழுதிக் கொடுத்ததில் உள்நோக்கம் இருக்கிறது’ என்றார். இந்தப் பிரச்சினை குறித்து சாமுண்டீஸ்வரி தரப்பில் விசாரிக்கச் சென்றபோது பதில் கூற மறுத்துவிட்டனர்.

சாமுண்டீஸ்வரி மற்றும் நெற்பயிரை சேதப்படுத்திய சதாசிவம் ஆகியோர் மீது களம்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நெற்பயிரை சேதப்படுத்திய டிராக்டரை நேற்று பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, சாமுண்டீஸ்வரியும், அவரது உறவினர் சதாசிவமும் தலைமறைவாக உள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான நீதிபதி மகிழேந்தி நேற்று நேரில் ஆய்வு செய்தார். அவரிடம் சாவித்திரி கூறும்போது, ‘ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த இளைஞருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றார். நீதிபதி மகிழேந்தி கூறும்போது, ‘இந்தப் பிரச்சினை குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். இது தொடர்பாக துணை காவல் கண்காணிப்பாளரிடமும் விசாரணை நடத்தப்படும்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்