திண்டிவனம் தொகுதியில் தீர்க்க முடியாத 10 கோரிக்கைகள் - அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: திண்டிவனம் சட்டப்பேரவை தொகுதியில் தீர்க்க முடியாத 10 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையைகூட நிறைவேற்ற அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிமுக எம்எல்ஏ தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதியில் தீர்க்க முடியாத 10 கோரிக்கைகளை, அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும் என எம்எல்ஏக்களுக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அறிவுறுத்தினார். அதன்பேரில் திண்டிவனம் அதிமுக எம்எல்ஏ அர்ஜூனன், தனது தொகுதியில் நீண்ட நாட்களாக மக்கள் முன்வைக்கப்படும், முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அப்போதைய ஆட்சியர் மோகனிடம் வழங்கினார்.

மனு அளித்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், மனுக்கள் மீதான நடவடிக்கை எந்த அளவுக்கு உள்ளது என திண்டிவனம் எம்எல்ஏ அர்ஜூனனிடம் கேட்ட போது அவர் கூறியது: திண்டிவனம் தொகுதியில் காகித தொழிற்சாலை கொண்டு வர வேண்டும். மரக்காணத்தில் பாலிடெக்னிக், கிழக்கு கடற்கரை சாலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.

மரக்காணம் கடற்கரை பகுதியில் விளையாட்டு மையம் மற்றும் படகு குழாமுடன், நீர் விளையாட்டு சுற்றுலாதலம் அமைக்க வேண்டும். மரக்காணம் பகுதியில் உப்பு தொழிற்சாலை அமைக்க வேண்டும். மரக்காணம் வட்டத்தில் அரசு துணைக் கருவூலம் அமைக்க வேண்டும். ஆவணிப்பூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

கீழ்புத்துப்பட்டில் ஆரம்ப சுகாதார நிலையம், முருக்கேரியில் மருத்துவப் பணியாளர் குடியிருப்புகள், திண்டிவனம், கிடங்கல் 2 பகுதியில் வீடற்ற மக்களுக்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடுகள் கட்டித்தர வேண்டும். பல்நோக்கு சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டும். மரக்காணம் அழகன் குப்பம் முதல் முதலியார் குப்பம்வரை தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்.

தொகுதியில் பல இடங்களில் பாலங்கள் அமைக்க வேண்டும். ஓங்கூர் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். கோவடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள், திண்டிவனம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் பெரிய ஊடு பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அம்மனுவில் குறிப்பிட்டு இருந்தேன்.

இக்கோரிக்கைகள் குறித்து இந்த ஒரு வருட காலத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகமோ, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோ இத்திட்டங்கள் பற்றி என்னிடம் எதுவும் பேசவில்லை எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE