ஒரே நாடு - ஒரே தேர்தல் என்பதில் சதித்திட்டம் உள்ளது: முதல்வர் ஸ்டாலின் 

By செய்திப்பிரிவு

சென்னை: "ஒரே நாடு - ஒரே தேர்தல் சட்டம் நிறைவேறினால், திமுக மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சியும் நாட்டில் செயல்பட முடியாது. எனவே ‘One Man Show’ ஆகிவிடும்." என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ந.மனோகரன் இல்லத் திருமண விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியது: "கழகம்தான் குடும்பம், குடும்பம்தான் கழகம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் அதே நேரத்தில் கொள்கைக் குடும்பமாக இருக்கிறோமா இல்லையா என்பதுதான் முக்கியம். யார் காலிலும் பாதத்திலும் விழுந்து வளர்ந்த குடும்பம் அல்ல இது. தவழ்ந்து சென்று வளர்ந்த குடும்பம் அல்ல இது. லட்சியக் குடும்பமாக, ஒரு கொள்கைக் குடும்பமாக, அண்ணா உருவாக்கிய இயக்கம். அண்ணா ஒரு குடும்பப் பாச உணர்வோடு இந்த இயக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். ஆனால் இது சிலருக்கு இன்றைக்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது. அதில் என்னென்ன பேசுகிறார் என்பதை எல்லாம் நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அதைப்பற்றி நாம் கவலையும் படவில்லை.

இன்றைக்கு நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையை நீங்கள் எல்லாம் உணர்ந்து பார்க்க வேண்டும். எவ்வாறு சட்டமன்றத்தில் தேர்தல் நடந்தபோது தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வோடு நீங்கள் எல்லாம் ஒரு சிறப்பான வெற்றியைத் திமுகவுக்கும், நம்முடைய கூட்டணிக்கும் ஏற்படுத்திக் கொடுத்தீர்களோ, அதே போல் இந்தியாவைக் காப்பாற்றுவதற்கு ஒரு அவசியம் ஏற்பட்டிருக்கிறது. நான் பலமுறை சொல்லி இருக்கிறேன், யார் பிரதமராக வரவேண்டும்? யார் ஆட்சிக்கு வரவேண்டும்? என்பதல்ல; யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் நம்முடைய லட்சியமாக - நோக்கமாக இருக்க வேண்டும். எனவே இண்டியா என்று சொன்னாலே இன்றைக்கு நிறைய பேருக்கு பயம் ஆகிவிட்டது. அதிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு அச்சமே ஏற்பட்டிருக்கிறது. இண்டியா என்ற பெயரைச் சொல்வதற்கே கூச்சப்படுகிறார்கள், அச்சப்படுகிறார்கள்.

இண்டியா கூட்டணி அமைத்து முதன் முதலில் பிஹார் மாநிலத்தில் நிதீஷ் குமார், பாஜக ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கும் எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்று திரட்டி பாட்னாவில் ஒரு கூட்டத்தை நடத்தி, அதில் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று உறுதி எடுத்தோம். அதற்கு பின்னால் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மீண்டும் இரண்டாவது முறையாகக் கூடி இந்தக் கூட்டணிக்கு இண்டியா என்ற பெயரைத் தேர்ந்தெடுத்து, அதை அறிவித்து, அதற்குப் பிறகு மராட்டிய மாநிலம் மும்பையில் மூன்றாவது கூட்டத்தை நடத்தி, நம்முடைய கூட்டங்கள் எப்படி செயல்பட வேண்டும், அப்படி செயல்படுவதற்கு என்னென்ன அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும், தேர்தல் களத்தில் நாம் எப்படி ஈடுபட வேண்டும், பிரச்சாரத்தை எப்படி நடத்த வேண்டும், எப்படி எல்லாம் நம்முடைய பணி அமைந்திட வேண்டும் என்பதற்காக அதற்கென்று சில குழுக்கள் எல்லாம்கூட அமைக்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம்.

எனவே இதையெல்லாம் பார்த்து அஞ்சி, நடுங்கி இன்றைக்கு பாஜக என்ன செய்திருக்கிறது என்று சொன்னால் திடீரென்று நாடாளுமன்றத்தைக் கூட்டப் போகிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் இன்றைக்கு எதற்காக அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால், ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்‘ என்ற ஒரு நிலையை ஏற்படுத்துவதற்காக சில முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அந்த ஒரே நாடு - ஒரே தேர்தலை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு குழுவை அமைத்திருக்கிறார்கள். அந்தக் குழுவுக்கு யார் தலைவர் என்றால், இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி. இந்திய நாட்டின் முதல் குடிமகன் என்று சொல்கிறோம் அல்லவா, அந்த ஜனாதிபதி பொறுப்பில் இருந்தவரைத் தலைவராக போட்டிருக்கிறார்கள். இந்திய நாட்டின் ஜனாதிபதி என்பவர் ஒரு பொதுவானவர். அவர் பதவியில் இருந்து விலகினாலும், அவர் அரசியலுக்கு வரக்கூடாது அல்லது அரசியல் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினையிலும் தலையிடுவது அவருக்கு நியாயம் கிடையாது. அதுதான் மரபு. அவர் ஒரு பொதுவானவராக மாறிவிடுகிறார்.

ஆனால் அதை எல்லாம் இன்றைக்குக் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல், இவர்கள் சொல்வதை அவர் கேட்பார் என்பதற்காக அவரைப் போட்டு, அதற்குப் பிறகு அதில் சில உறுப்பினர்களைப் போட்டிருக்கிறார்கள். அந்த உறுப்பினர்களிலாவது எல்லா கட்சியும் கலந்து, கேட்டு போட்டார்களா என்றால், அதுவும் கிடையாது. திமுக இன்றைக்கு நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. திமுகவின் பிரதிநிதிகள் இருக்கிறார்களா என்றால் கிடையாது. எனவே தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என்பதற்காக சில பேரை போட்டு, அவர்கள் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சர்வாதிகாரத்தோடு அந்த கமிட்டியை நியமித்து ஒரு சதித்திட்டத்தை ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதை இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் எதிர்க்கட்சி அதிமுக, - ஆளுங்கட்சியாக இருந்தபோது அந்தக் கொள்கையை எதிர்த்தார்கள். இப்போது எதிர்க்கட்சியாக இருக்கிறபோது, திமுக ஆளுங்கட்சியாக இருக்கிறபோது, அதே அதிமுக அதை ஆதரிக்கிறது. இதை ஆதரிக்கிறதை பார்க்கிறபோது என்ன நினைக்கிறோம் என்றால், ஆட்டுத் தலையை வெட்டுவார்கள் அல்லவா, அதற்கு என்ன சொல்வார்கள்? ஆம், பலிகடா செய்வார்கள் அல்லவா, அந்த மாதிரிதான். தாம் பலிகடா ஆகப்போகிறது என்று ஆட்டுக்கு தெரியாது. அதனால் அதிமுக பலிகடா ஆகப்போகிறது. இந்த சட்டம் நிறைவேறினால், திமுக மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சியும் நாட்டில் செயல்பட முடியாது. எனவே ‘One Man Show’ ஆகிவிடும். ஒரே நாடு - ஒரே தலைவர், ‘அதிபர்’ என்று அவரே அறிவித்து விடலாம். எனவே தேர்தலே கிடையாது. ஒரே நேரத்தில் ஒரே தேர்தல்தான் வைக்கப் போகிறோம் என்று சொல்கிறார்கள்.

நான் கேட்கிறேன், கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். 2021-இல் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடந்து, நாம் ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடம் ஆகிறது. இன்னும் இரண்டரை வருடம் இருக்கிறது. எனவே நாடாளுமன்றத் தேர்தல் வருகிறபோது, ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்றால் இந்த ஆட்சியைக் கலைத்து விடுவீர்களா? நாம் மட்டுமா, பக்கத்தில் இருக்கும் கேரள மாநிலம். அதேபோல மேற்குவங்கம். அங்கெல்லாம் கலைத்துவிடுவீர்களா? அவர்களுக்கெல்லாம் இன்னும் இரண்டரை வருடத்துக்கு மேல் ஆட்சி இருக்கிறது. ஏன் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கர்நாடக மாநிலம். அங்கு 40 சதவீதம் ஊழல் என்ற ஒரு சிறப்புப் பெயர் எடுத்து, பாஜக, படுதோல்வி அடைந்து, அங்கு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்திருக்கிறது. எனவே அந்த ஆட்சியைக் கலைத்து விடுவீர்களா?

சரி, அதுதான் போகட்டும். ஒரே நேரத்தில் தேர்தல் வைக்கிறீர்கள். அப்படி நாடாளுமன்றத்தோடு சட்டமன்றங்களுக்கும் தேர்தல் வைத்து, எங்காவது ஒரு மாநிலத்தில் மெஜாரிட்டி வராமல் போய்விட்டது என்றால், ஆட்சியை அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது என்றால் அப்போது என்ன செய்வீர்கள்? மறுபடியும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரும்வரை அந்தத் தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி ஆட்சி நடத்தப் போகிறீர்களா? எனவே இப்படி ஒரு அசிங்கமான, கேவலமான ஒரு சதித் திட்டத்தைத் தீட்டி, எனவே ஒரு அதிபராகத் தான் இருக்க வேண்டும் என்பதற்காக இன்றைக்கு அந்த முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர நாட்டைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. தேர்தல் செலவை மிச்சப்படுத்த வேண்டும், குறைக்க வேண்டும் என்ற ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். நீங்கள் தேர்தல் செலவைக் குறைக்கிறீர்களோ, இல்லையோ, நீங்கள் கொள்ளை அடிப்பதை முதலில் குறையுங்கள்.

சிஏஜி ரிப்போர்ட் என்ன கொடுத்திருக்கிறது? 7.5 லட்சம் கோடி. நெடுஞ்சாலை போட்டதில், அதே நேரத்தில் டோல்கேட் வசூலில் - இப்படி பல நிலைகளில் கோடி கோடியாகக் கொள்ளை அடித்து, அதுவும் ஆதாரங்களோடு சிஏஜி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதைப் பற்றி கவலைப்படாமல், அதற்கு இதுவரை பதில் சொல்ல முடியாத நிலையில் ஒரு பிரதமர் இருக்கிறார் என்று சொன்னால், இப்படிப்பட்ட இந்த கொடுமையான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழியும், சபதமும் – ‘இந்தியாவைக் காப்பாற்ற நாம் இன்றைக்குத் தயாராக இருக்க வேண்டும்‘ என்று இந்த நேரத்தில் உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்