மின்சார ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையில் நிறுத்தி இயக்கம் - ரயில் பயணிகள் வருகை 40% சரிவு

By செய்திப்பிரிவு

சென்னை: வேளச்சேரி - கடற்கரை பறக்கும்வழித்தட ரயில்கள், சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி இயக்குவதால், பறக்கும் வழித்தட ரயில்களில் பயணிகள் வருகை 40 சதவீதம் வரை குறைந்துள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில், தினமும் 150 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டன. இவற்றில், ஒரு லட்சம் பேர் வரை பயணம் செய்தனர்.

இந்த வழித் தடத்தில் இருக்கும் 17 ரயில் நிலையங்களில் வேளச்சேரி, திருவான்மியூர், மயிலாப்பூர், சேப்பாக்கம், கோட்டை, கடற்கரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்கிடையில், சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே 4-வது புதிய பாதை பணி கடந்த27-ம் தேதி தொடங்கியது.

இதனால், வேளச்சேரி –சென்னை கடற்கரைக்கு செல்ல வேண்டிய பறக்கும் ரயில்கள், சிந்தாதிரிப்பேட்டை வரை மட்டுமே இயக்கப் படுகின்றன. இதனால், வேளச்சேரியில் இருந்து பூங்கா, கடற்கரைக்கு செல்ல வேண்டிய பயணிகள் அவதிப்படுகின்றனர். சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி பேருந்துகளில் பூங்கா, கடற்கரை நிலையத்துக்கு குறிப்பிட்ட சில பயணிகள் செல்கின்றனர். இதனால், காலதாமதம் ஏற்பட்டு வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.

பறக்கும் ரயில் வழித்தடத்தில்..: இது குறித்து பறக்கும் ரயில் நிலைய அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பறக்கும் ரயில் வழித் தடத்தில் நாள்தோறும் ஒரு லட்சம் பேர் பயணம் செய்தனர். தற்போது, சிந்தாதிரிப்பேட்டை வரை மட்டுமே இந்த ரயில்கள் இயக்கப்படுவதால், கோட்டை, கடற்கரை, ஆவடி, அரக்கோணம்,

கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டிய பயணிகள், மாற்று போக்குவரத்து வசதிக்கு மாறி வருகின்றனர். 40 சதவீத பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. அலுவலக நேரங்களை தவிர, மற்ற நேரங்களில் ரயில்கள் காலியாக செல்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE