திருச்சி: மேட்டூர் அணை உட்பட, தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களை பெரும் செலவின்றி தூர் வாரி, ஆழப்படுத்தலாம் என்று தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் யோசனை தெரிவித்துள்ளது.
1934-ல் கட்டப்பட்ட மேட்டூர் அணை ஏறத்தாழ 90 ஆண்டுகளாக தூர் வாரப்படாததால், அணையின் கொள்ளளவில் சுமார் 30 சதவீதம் அளவுக்கு மண் சேர்ந்துள்ளது. இந்த அணையை தூர் வாரினால், 30 டிஎம்சி அளவுக்கு தண்ணீரை கூடுதலாக தேக்கிவைக்க முடியும்.
அதேநேரத்தில், காவிரி ஆற்றின் உபரி நீர் கடலில் கலப்பதைத் தடுக்க, ஆற்றின் குறுக்கே புதிதாக அணைகளைக் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.
கர்நாடகாவிடமிருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்காததால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 51 அடியாக சரிந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் நீரின்றிக் காய்கின்றன. சம்பா சாகுபடியைத் தொடங்குவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் விவசாயிகள் உள்ளனர்.
இந்நிலையில், மேட்டூர் அணையைத் தூர் வாரி, உபரியாக வரும் தண்ணீரைச் சேமிக்கலாம் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது. மேட்டூர் அணையைத் தூர் வார ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு செலவாகும் என்பதால், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஆனால், பெரிய அளவில் செலவழிக்காமல், தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களையும் தூர் வார முடியும் என்கிறார் தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர்கள் சங்கச் செயலாளர் ஏ.வீரப்பன்.
இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: மேட்டூர் அணையைத் தூர் வார தமிழக நீர்வளத் துறை ரூ.3 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிட்டுள்ளது. ஆனால், இவ்வளவு தொகையை செலவிடத் தேவையில்லை.
தமிழகத்தில் ஏராளமான சாலைமற்றும் பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்குத் தேவையான மண் கிடைக்காமல்,பல பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதேபோல, வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளிட்டவைகளைக் கட்டும் கட்டுமானநிறுவனங்களுக்கும், நிலத்தின் மட்டத்தை அதிகரிக்க மண் தேவைப்படுகிறது. அணைகளில் தூர்வாரும் போது கிடைக்கும் மண்ணை இதற்குப் பயன்படுத்தலாம்.
தமிழகத்தில் மேட்டூர், கிருஷ்ணகிரி, பவானிசாகர், வைகை, சாத்தனூர், அமராவதி, திருமூர்த்தி, உப்பாறு, மணிமுத்தாறு போன்ற அணைகள் மற்றும் வீராணம் போன்ற நீர்த்தேக்கங்கள் உள்ள நிலையில், முதலில் எந்தெந்த அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் எவ்வளவு ஆழத்துக்கு தூர் வார வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களை சேகரித்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மட்டும் செலவிட்டால் போதுமானது.
அதன் பின்னர், தங்களது செலவிலேயே தூர் வாருதல், மண்ணை அப்புறப்படுத்துதல் ஆகியவற்றில் விருப்பமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்ற ஒப்பந்தப் புள்ளியைக் கோரலாம். அதில் சிறந்த நிறுவனத்தை தேர்வுசெய்து, இந்தப் பணியை ஒப்படைக்கலாம். நீர் வற்றிய பின்னர்தான் தூர்வார வேண்டும் என்றுகட்டாயம் கிடையாது. தண்ணீர் இருக்கும்போதே தூர்வாரும் இயந்திரங்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தலாம்.
இந்த திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முன்வந்தால், பெரிய செலவின்றி அணைகளைத் தூர் வாரி, மழைக்காலத்தில் கிடைக்கும் உபரி நீரைச் சேமிக்கலாம். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டமும் மேம்படும். இது தொடர்பாக தமிழகமுதல்வருக்கும் கடிதம் அனுப்பி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago