“பாஜக ஆட்சியின் முடிவுக்கு கவுன்ட்டவுன் ஆரம்பம் ஆகிவிட்டது” - மும்பையில் முதல்வர் ஸ்டாலின் கருத்து

By செய்திப்பிரிவு

மும்பை: "அரசியல் எதிரிகளை எல்லாம் அச்சுறுத்துகிற ஏவல் அமைப்புகளாக அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை பாஜக ஆட்சி பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பொய்களையும் அவதூறுகளையும் வெறுப்பையும் முதலீடாக வைத்து பாஜக நடத்திவரும் பாசிச ஆட்சியின் முடிவுக்கு 'கவுன்ட்டவுன்' ஆரம்பமாகி உள்ளது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தின் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் விடுத்த அறிக்கை: "இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இண்டியா கூட்டணி பாட்னாவில் கூடும்போது 19 கட்சிகள், பெங்களூரில் கூடும்போது 26 கட்சிகள், மும்பையில் கூடிய இன்று 28 கட்சிகள் என இண்டியா கூட்டணி நாளுக்கு நாள் வலிமை அடைந்து வருகிறது. எங்கே சென்றாலும், எங்கே பேசினாலும் தன்னுடைய ஆட்சியின் சாதனைகளைச் சொல்லாமல், எங்களைப் பற்றியே பேசி எங்கள் கூட்டணிக்கு சிறந்த 'விளம்பரதாரராக' பிரதமரே செயல்பட்டு வருகிறார். இண்டியா கூட்டணியை பாப்புலர் ஆக்கியதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

9 ஆண்டுகள் ஆட்சி செய்தும் சொல்வதற்கு சாதனைகளே இல்லாத ஆட்சி ஒன்றிய பாஜக ஆட்சிதான். சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள 7.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் பற்றிப் பேசாமல் பிரதமர் மோடி அமைதி காக்கிறார். மோடி ஆட்சி நாளுக்குநாள் ‘அன்பாப்புலர்’ ஆகி வருகிறது. இண்டியா கூட்டணி ஒவ்வொரு நாளும் ‘பாப்புலர்’ ஆகி வருகிறது. இது ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கூட்டணி மட்டும் அல்ல. இந்திய நாட்டையும் 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுவதற்கான கூட்டணி.

இது கட்சிகள் தங்கள் தேவைக்காக உருவாக்கிய கூட்டணி அல்ல; மாறாக, மக்கள் விருப்பத்தால் உருவாகி இருக்கிற மகத்தான அணி. எதிர்க்கட்சிகள் ஒன்றுபட மாட்டார்களா என ஏங்கிய இந்திய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக உருவாகி இருக்கிற அணி. மராட்டிய மக்கள் இந்த அணிக்கு இன்று பரிபூரணமான ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள். இன்றைய கூட்டம், திருப்திகரமாக மட்டுமல்ல, திருப்புமுனையாகவும் அமைந்திருக்கிறது. இண்டியா கூட்டணிக்கான ஆதரவும், எங்கள் மீதான எதிர்பார்ப்பும் நாட்டு மக்களிடையே நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

பொய்களையும் அவதூறுகளையும் வெறுப்பையும் முதலீடாக வைத்து பாஜக நடத்திவரும் பாசிச ஆட்சியின் முடிவுக்கு 'கவுன்டவுன்' ஆரம்பமாகி உள்ளது. ஒன்பது ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஜனநாயகத்துக்குத் துளியும் மதிப்பில்லை. தற்போது அது இந்தியாவின் ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது. மக்களாட்சியில் தன்னாட்சி அமைப்புகளையும், மரபுகளையும் சிதைத்த அரசாக; தங்களது எதிரான கட்சிகளின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்த அரசாக மோடி தலைமையிலான அரசு வரலாற்றில் பதியப்படும். அதற்கு மகாராஷ்ராவே சிறந்த சாட்சி.

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்துவதும், முறைகேடாக சம்பாதித்த பணத்தைக் கொட்டி, விசாரணை அமைப்புகளை ஏவி அவர்களது ஆட்சியைக் கவிழ்ப்பதும் பாஜகவின் முழுநேரத் தொழிலாக மாறிவிட்டது. தன்னை எதிர்ப்பவர்களே அரசியலில் இருக்கக்கூடாது என நினைப்பதும் செயல்படுவதும் சர்வாதிகாரம். இந்தியாவில் தற்போது அரசியல் சர்வாதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆட்சியில் நாடாளுமன்றத்துக்கும் மதிப்பு இல்லை, நீதிமன்றங்களுக்கும் மதிப்பில்லை. தேர்தல் ஆணையம் இந்த அரசின் தலையாட்டி பொம்மையாக ஆகிவிட்டது. அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை என எல்லா உயர் அமைப்புகளின் சுதந்திரத்தையும் பறித்துவிட்டு, கூட்டணிக்கு ஆள் பிடிக்கிற, அரசியல் எதிரிகளை அச்சுறுத்துகிற, தங்களுக்கு விருப்பத்துக்கேற்ப செயல்படும் ஏவல் அமைப்புகளாக மாற்றிவிட்டார்கள்.

நரேந்திர மோடி என்கிற தனிநபரிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை பறிப்பது எங்கள் நோக்கம் அல்ல, யார் மீதும் தனிப்பட்ட வெறுப்போ வன்மமோ எங்களுக்கு இல்லை. மீண்டும் பாஜகவிடம் ஆட்சியைக் கொடுத்தால் நாம் பார்த்த இந்தியாவே இனி இருக்காது. அதனால் எதிர்க்கிறோம்.

தனித்தனி கட்சிகளாக இருந்தாலும் இந்தியாவைக் காப்பாற்றுவது ஒன்றே எங்களது இலக்கு. அரசியல் லாபங்களுக்காக நாங்கள் அணி சேரவில்லை. இந்தியாவின் இறையாண்மையை, மாண்பை, மதச்சார்பின்மையை, சமூகநீதியை,சகோதரத்துவத்தைக் காப்பாற்றுவதற்காக சேர்ந்திருக்கிறோம். அந்த லட்சியத்தை மக்கள் சக்தியோடு நாங்கள் வெல்வோம். பாஜக வீழ்த்த முடியாத சக்தி அல்ல, வெவ்வேறு மாநிலங்களில் தனித்தனியாக வீழ்த்தப்பட்ட கட்சிதான் பாஜக.

மிருக பலம் எனப்படும் 'brute majority' இருந்தும் ஏழை, எளிய மக்களுக்கு மோடி ஆட்சியால் எந்த நன்மையும் வரவில்லை. மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை. தற்போது அதிகரித்து வரும் வெறுப்பரசியல் சூழலால், சராசரி இந்திய குடிமகனின் எதிர்காலம், அப்பாவி மக்களின் உயிருக்கும் உடைமைக்குமான பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. பாஜக முன்னெடுக்கும் வெறுப்பு அரசியலாலும், வகுப்பு மோதல்களாலும், தங்களுக்கு வேண்டிய பெருமுதலாளிகளுக்குத் துணைபோகும் செயலாலும் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு குறைந்திருக்கிறது.

ஒரு நாடு ஒரு வரி, ஒரு நாடு ஒரு மொழி, ஒரு நாடு ஒரே கல்வி, ஒரு நாடு ஒரே தேர்தல், ஒரு நாடு ஒரே கட்சி என ஒற்றையாட்சியை, ஒற்றைக் கட்சி நாடாக இந்தியாவை மாற்ற நினைக்கும் பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது. இந்தியாவை பாதுகாக்கும் மகத்தான அரசியல் களத்தில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள எதிர்க்கட்சிகள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உள்ளன. இந்திய மக்கள் ஒவ்வொருவரும், இந்தியாவைக் காக்கிற போரில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டி கேட்டுக்கொள்கிறேன்" என்று முதல்வர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்