ஆளுங்கட்சி பிரமுகர்களால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு: பட்டியலிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: "தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் எந்தஒரு குற்ற நிகழ்விலும், ஏதாவது ஒரு ஆளும் கட்சிப் பிரமுகர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மக்களிடையே அச்சமும், பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும், முதல்வர் ஸ்டாலினின் திறமையின்மையால் ஏற்பட்டுள்ளது. இது, தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்’ என்னும் முதுமொழியை மெய்ப்பிக்கும் வகையில், இந்த திமுக ஆட்சியில் தமிழகம் புதைகுழிக்குள் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு பல குற்ற நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். யார் ஆட்சியில் இருந்தாலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக பிரச்சினைகள் ஏற்படுவதும், காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதும் இயல்பு. குறிப்பாக, அதிமுகவின் ஆட்சியிலும், அரசிலும் சமூக விரோதிகள், கூலிப் படையினர், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், கள்ளச் சாராய வியாபாரிகள் போன்றோரின் அத்துமீறிய செயல்பாடுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு, சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்டது.

2011 முதல் 2021 வரை பத்து ஆண்டுகள் தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்ட இவர்கள், திராவக மாடல் ஆட்சி அமைந்த இந்த 28 மாதங்களில், லைசென்ஸ் பெற்றதுபோல் தமிழகத்தை குட்டிச்சுவராக்கி வருகிறார்கள். சமூக விரோத சக்திகளை ஒடுக்க வேண்டிய காவல் துறையினர், ஆளும் கட்சியினரின் கட்டளைக்கு அடிபணிந்து, கைகட்டி வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது.

தற்போது நடைபெற்று வரும் எந்த ஒரு குற்றக் நிகழ்விலும், ஏதாவது ஒரு ஆளும் கட்சிப் பிரமுகர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மக்களிடையே அச்சமும், பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும், இந்த பொம்மை முதல்வர் ஸ்டாலினின் திறமையின்மையால் ஏற்பட்டுள்ளது. இது, தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது. அதிமுக ஆட்சியில் சாதி, மத, இன மோதல்கள் இன்றி மக்கள் சகோதரத்துவத்துடன் இணக்கமாக வாழ்ந்து வந்தனர்.

இந்த திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பட்டியலின மக்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. பட்டியலின மக்கள் தாக்குதல் என்ற நிலை மாறி, நாங்குநேரி, கரூர் என்று பல இடங்களில் பட்டியலின மாணவர்களும் தாக்கப்படுவது சர்வசாதாரணமாகி உள்ளது. தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில், ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள் தாக்கப்படுவது மற்றும் சுதந்திரமாக செயல்பட முடியாத அவல நிலை அரங்கேறி வருகிறது.

அதேபோல், திருநெல்வேலியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், மத வழிபாட்டுத் தலத்தில் நடத்திய தாக்குதலில் சம்பந்தப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. திமுக அரசு பொறுப்பேற்ற நாள்முதல் சமூக விரோதிகளின் கொட்டமும், கொலைகளும் அதிகரித்து வருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில வாரங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 கொலைகளுக்குமேல் நடந்துள்ளதாக செய்திகள் மூலம் தெரிய வருகின்றன.

அண்ணாநகர், அண்ணா டவர் பூங்காவில் ஒரு தன்னார்வ அமைப்பு நடத்திய ஓவியக் காட்சி அரங்கங்களை பார்வையிட வந்த சென்னை மாநகராட்சி ஆணையரிடம், பொது ஊடகங்கள் முன்னிலையில் அங்கு வந்த திமுக நிர்வாகி கையூட்டு கேட்பது இந்த திமுக அரசின், ஆளும் கட்சி நிர்வாகிகளின் அடாவடிகளுக்கு, `ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்ற நிலை உருவாகி வருகிறது.

இந்த திமுக அரசின் 28 மாத கால ஆட்சியில் நிர்வாக சீர்கேட்டோடு, கஞ்சா போன்ற போதை மருந்துகளின் நடமாட்டம் மிகவும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளின் மயக்கத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என்று அனைவரும் சர்வசாதாரணமாக குற்றச் செயல்களில் ஈடுபடுவது; கொலைவெறித் தாக்குதல் நடத்துவது; குறிப்பாக, வணிக நிறுவனங்களைத் தாக்குவது போன்ற சட்டவிரோதச் செயல்களால், வணிக நிறுவனங்களை நடத்தி வரும் வியாபாரிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திமுக அரசு பொறுப்பேற்றது முதல், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களின் நடமாட்டம் மற்றும் போதைப் பொருள் கேந்திரமாக தமிழகம் மாறியுள்ளதை அடிக்கடி நான் அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் எடுத்துரைத்து வருகிறேன். சட்டம்-ஒழுங்கைக் காக்கவும், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைத் தடுக்கவும், காவல் துறையை சுதந்திரமாக செயல்பட வலியுறுத்தினேன். ஆனால் இவ்விஷயத்தில், திமுக அரசு கேளாக் காதினராய் இன்றுவரை உள்ளது. இந்த ஆட்சியாளர்கள் செய்யும் அக்கிரமங்களை எல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டியது மக்களின் தலைவிதியாக உள்ளது.

இந்த திமுக அரசு கடிவாளம் இல்லா குதிரைபோல் தறிகெட்டு ஓடுகிறது. பொம்மை முதல்வரை விளம்பரப் படுத்துவது ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த ஆட்சியாளர்களை கட்டுப்படுத்தும் நேரம் நெருங்கிவிட்டது. விதிவசத்தால் ஆட்சியாளர்களிடம் மாட்டிக்கொண்ட தமிழக மக்கள் இப்போது விழிப்படைந்துள்ளனர்.

இனியாவது, சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளையும், போதைப் பொருட்கள் நடமாட்டத்தையும் முடிவுக்குக் கொண்டுவர, திறமையான காவல் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தி, இரும்புக் கரம் கொண்டு போதைப் பொருட்கள் நடமாட்டத்தை ஒடுக்குவதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், திமுக ஆட்சியாளர்களுக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்